Tuesday 30 April 2013

வாழ்க்கைப் பாடம்


திருச்சியில் செல்வசுந்தரி என்று எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். என் மகளாகவே மாறி என் மீது அன்பைச் சொரிபவர்.

ஒருநாள், என்னைக் கைப்பேசியில் அழைத்தார். ஒரு இதழின் பெயரைச் சொல்லி, அதில் தன்னுடைய கதை வந்திருப்பதாகவும், அதைப் படித்து எப்படி இருக்கிறதென்று நான் சொல்வதைக் கேட்க ஆர்வமாய் இருப்பதாக சொன்னார்.

கதை வந்த இதழ், ஒரு நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பு. தகவல் சொன்னதோ, அன்று மாலைதான். நான் வாங்குவதோ, வேறொரு நாளிதழ். உடனே, பைக்கில் கடைக்குப் போனால், "தீந்துடுச்சு சார்!" என்றார்கள்.

எழுத்தாளர் மகளைக் கூப்பிட்டு, "பேப்பர் கிடைக்கலம்மா. என் நண்பர் ஒருத்தர் அதான் வாங்குறார். அவர்கிட்ட சொல்லி இருக்கேன். காலையில் கொண்டு வந்து தர்றதா சொல்லி இருக்கார். காலையில் படிச்ச உடனே கண்டிப்பா போன் பண்றேன்" என்றேன்.

றுநாள் இதழைக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்ன நண்பர் காலையில் என் வீட்டு வழியே பைக்கில் தென்பட்டார். நான் கேட்ட இதழைக் கொண்டு வருகிறார் என்று நினைத்து, அவசரமாக வாசலுக்கு வந்தால், அவர் நிற்காமலே நேரே போய்க் கொண்டேயிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அன்று மதியம் "படிச்சிட்டீங்களாப்பா?" என்று எழுத்தாளரிடமிருந்து ஆர்வம் பொங்கும் கேள்வி. "இன்னும் இல்லேம்மா! நண்பர்கிட்ட சொன்னேன்.தர்றேன்னு சொன்னவர் எதுவும் சொல்லாம, பாத்தும் பாக்காத மாதிரி போய்க்கிட்டே இருக்காரும்மா. இனி, அவர்கிட்ட கேக்கமாட்டேன். எப்படியாவது ஏஜென்ட்கிட்டேயிருந்து வாங்கியாவது படிச்சிட்டு சொல்றேம்மா."

"என்னப்பா நீங்க? நண்பர்ங்கிறீங்க! அப்புறம் ஏன் இதுக்குப் போய் அவர் மேல இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு என்ன வேலையோ, என்னமோ! எதுக்காகவும் யார் மேலேயும் நாம சடாருன்னு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாதுப்பா. நானே ஒரு இதழை கொரியரில் அனுப்பி வைக்கிறேம்ப்பா!"

எனக்கு மேலும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ன்று முன்னிரவு நேரம். நண்பர் அந்த இதழோடு வந்து நின்றார்.

"யாரோ வீட்டுக்கு வந்தவங்க அந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அதை விசாரிச்சு தேடிப்பிடுச்சி வாங்கியாந்தேன். புத்தகத்தோடு வரணும்னுதான் உங்கக்கிட்ட காலையில ஏதும் பேசாம போயிட்டேன்." என்று சிரித்தார்.

எனக்கு கவலை கொஞ்சம் அதிகமாகி விட்டது.

'எப்போதுதான் வாழ்க்கைப் பாடத்தை நாம் சரியாகக் கற்றுகொள்ளப் போகிறோமோ, தெரிய வில்லையே!'

- கிழக்கு வாசல் மார்ச் இதழில்

1 comment:

  1. ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் நிறைய உள்ளன. இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. எனக்கும் ஒரு நண்பருக்கும் சிறு சண்டை. நான் என் மகளிடம் கோபமாக சண்டையை பெரிதாக்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவள் நீங்கள் தானே " இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " என்று சொல்லிக்கொடுத்தீர்கள். இப்போது இப்படி கோபப்படலாமா எனக் கேட்டாள். அப்போதுதான் என் தவறு புரிந்து மன்னிப்புக் கேட்டேன். - கிருஷ்.இராமதாஸ், துபாய். [பெரம்பலூர்].

    ReplyDelete