Sunday 1 January 2017

மாயவனத்தின் வசீகரன்

பரமக்குடி பா. உஷாராணி


ஒளிப்படம்: தேனி ஈஸ்வர் | நன்றி: தளவாய் சுந்தரம்
டிசம்பர் 22ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் நண்பர் ரிஷபன் திருவரங்கத்திலிருந்து அலைபேசியில் பேசினார்.

“நம்ம வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாடமி விருது” அவர் சொல்லி முடிப்பதற்குள் “ஹை அப்படியா! அப்படியா!” என நான் வானுக்கும், பூமிக்கும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டேன். பரவசம் என் இரு சிறகுகளாகிப் போனது. மகிழ்ச்சி வெள்ளத்தில் என் நதி நுரைத்துப் பொங்கிப் பெருக்கெடுத்தோடியது. இருக்காதா பின்னே!

‘படைப்புக் கடவுள்’ என அவரைக் கொண்டாடும் திருக்கூட்ட மரபு எங்களுடையது. வண்ணதாசனைப் பிடிக்கும் எனச் சொல்பவர்கள், அடுத்த நொடியே எங்கள் ஆத்மார்த்தமான தோழமைகளாகிவிடுகிற வரம் பெற்றவர்கள் நாங்கள். அவர் வாழும் காலத்தில், நாமும் வாழ்கிறோம் எனப் பெருமிதப்படுகிறவர்கள்.

தொலைக்காட்சியே பார்க்காத நான், அன்று முழுக்கத் தொலைக்காட்சியை ஓடவிட்டேன். மிக அருமையாகப் பேட்டி தந்துகொண்டிருந்தார். தொலைக்காட்சி நிருபரின் ஒரு கேள்விக்கு “படைப்பாளியான என்னைவிட கலைஞன் என்ற முறையில் வண்ணநிலவனுக்கு இந்த விருது சேர்ந்திருக்கலாம்” என்றார். என்ன சொல்ல! இதை இதைத்தான் எழுத்துக்களாக விதைக்கிறார் அவர். பிரியத்தின் திரைச்சீலையில், நேசத்தூரிகையால் அன்பின் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருப்பவர் அல்லவா அவர்.

சி. கல்யாணசுந்தரம் என்கிற இயற்பெயரைக் கொண்டவர். ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதை களும், ‘வண்ணதாசன்’ என்கிற பெயரில் கதைகளுமாய் 1962இலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். கதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், கடிதங்களாகட்டும் அவரது எழுத்துக்கள் தனித்த வண்ணமும், அடர்த்தியும் நிரம்பியவை. எல்லோரிடமும் அன்பாயிருக்கத் தூண்டுபவை. எதிர்ப்படும் எவரையும் சினேகிக்க உந்தித் தள்ளுபவை. மனசை மிருதுபடுத்துகிற, இதப்படுத்துகிற இழைகளால், அளப்பரிய அன்பின் பிரபஞ்சத்தை நெய்பவை.

‘மனிதனே, இந்த உலகை நீ, கடவுளின் கண்களால் பார்’ என்பாரே கலீல் ஜிப்ரான். அதைப் போன்றே வண்ணதாசனும் கடவுளின் கண்களால் இவ்வுலகை, இம்மனிதர்களைக் காணும் அற்புதர்.

மானுட அன்பின் வற்றாத, நெகிழ்ச்சியூட்டும் ஈரங்களைத் தன் தனித்துவமிக்க எழுத்தாற்றலால் பரிமளிக்கச் செய்கிறவர். வனப்பு மிளிரும் அவரது நுண்மையான மொழிநடைக்கு உதாரணங்கள் முன்னும் இல்லை; பின்னும் இல்லை.

க்ரைம் நாவல்கள் தொடங்கிப் பாலகுமாரன் வரை பள்ளி புத்தகப் பைக்குள் மறைத்து எடுத்துச் சென்று, வாசிக்கும் அளவிற்குப் புத்தகப் பைத்தியமான நான், வண்ணதாசனில் வந்து நிலைத்தது. வண்ணதாசனின் ‘எல்லோருக்கும் அன்புடன்’ கடிதத் தொகுப்பு நூலை எனக்குத் தபாலில் அனுப்பியிருந்தார். என் உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அதன்பின் கதை, கவிதை என அவரது தொகுப்புகளை வாசிக்க, வாசிக்க என் பூமி புதுசாய் மாறிப்போனது. ‘வண்ணதாசன் கதைகள்’ நூலே எனக்கான பகவத் கீதையானது.

அவரது பெருவனத்திற்குள் அன்று நுழைந்தவள், இன்று வரை மீளவேயில்லை. நான் மட்டுமல்ல, அவரது வாசகர்கள் ஒவ்வொருவருமே அப்படியானவர்கள்தான்! அவ்வாறானதொரு மாயவனத்தின் வசீகரன் அவர்.

‘சமவெளி, கலைக்க முடியாத ஒப்பனைகள், மணல் உள்ள ஆறு, கிருஷ்ணன் வைத்த வீடு, சின்னு முதல் சின்னு வரை, இன்னொரு கேலிச்சித்திரம், பூனை எழுதிய அறை, மீனைப் போலவே இருக்கிற மீன், நாபிக்கமலம், இப்போது விருது பெற்றிருக்கும் ‘ஒரு சிறு இசை’ வரைக்கும், எத்தனை எத்தனை தொகுப்புகள்!

ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கும்போதெல்லாம், பரபரப்புடன் எதிர்பார்த்து, ஏமாற்றத்துடன் கடந்து செல்வேன்.

1954இல் பிரதமர் நேரு தொடங்கி வைத்த அமைப்புதான் சாகித்திய அகாடமி. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்து, ஒவ்வொரு மொழிக்கும், ஒரு எழுத்தாளர் என விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருதாக ஒரு லட்சத்திற்கான காசோலை, சால்வை, செப்புப்பட்டயம் வழங்கப்படும். தமிழ்மொழிக்கான பிரிவில் ஆரம்பத்திலிருந்தே எழுத்தாளர் தேர்வு என்பது கடும் விமர்ச்சனங்களுக்கு உள்ளாகி விடும்.

‘உலகில் நல்லறங்களும், நல்லிசையும், நல்லியல்புகளும், நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது, ஒரு திருவிழா போல் நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர். ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கைகளிலும் சந்தனம். எல்லோர் சிகையிலும் ரோஜா இதழ்.’

தன் தந்தை தி.க.சிக்கு நிகழ்ச்சிக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகள் இவை. இதோ இப்போது அவரைக் கொண்டாடும் எங்கள் எல்லோர் முகங்களிலும் சுடர். ஒவ்வொருவர் கையிலும் சந்தனம். ஒவ்வொருவர் சிகையிலும் ரோஜா இதழ்.

ஆம்! இது திருவிழாக்காலம். வாழ்க நீ எம்மான் எந்தையே!