Thursday 26 December 2013

கடவுள் விட்ட வழி

பள்ளிக்கூடத்தில் ஏழாம்  வகுப்பு ‘பி’ பிரிவு. புகைப்படத்தில் முழங்கை வரை தொங்கும் தொளதொளா  சட்டையும், முழங்காலுக்கு கீழேயும் நீளும் அரை டிராயருமாய்க் காட்சியளிக்கும் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் எங்கள் ஊர் டெய்லர்தான்.

எனது வகுப்பறையில்  ஏனைய  மாணவர்கள் கச்சிதமாக உடம்போடு பொருந்தும் சட்டை டிராயருடன் காட்சியளித்தபோது  என்னை மட்டும் ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கிவிட்டிருந்தார் எங்கள் ஆஸ்தான டெய்லர்.

அப்பாவே ஒருமுறை தாங்கிக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டார்.

“ரொம்ப லூசா தச்சிட்டீங்க போலிருக்கே!”

“வளர்ற பையன் தானே சார்!”

'என்னது! அந்த சட்டை டிராயரை நான் வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன!' எனக்கு கோபம் கோபமாக வந்தது!

டெய்லரின் சுபாவம் விசித்திரமாக இருக்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது  என்று பார்க்க விரும்பாததுபோல் குனிந்து தைத்துக் கொண்டே இருப்பார்!

தெரு வழியே சர்க்கஸ் வண்டி போகும். கல்யாண ஊர்வலம் போகும். பட்டாசு அதிரும். தாரைத் தப்பட்டையுமாய் இறுதி ஊர்வலமும் போகும். ம்கூம்! டெய்லர் நிமிர்ந்தே பார்க்க மாட்டார்!

சாயங்கால வேளை களில் அவர் மனைவியும், பெண்களும் தட்டு நிறைய காராசேவு வாங்கி வைத்துக் கொண்டு கூஜா நிறைய காபி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது. எனக்கு ஒரு வகையில் சந்தோஷம். அப்பாடா! இந்த டெய்லரிடமிருந்து விடுதலை!

ஒரு வகையில் வருத்தம். குனிந்தபடி தைக்கும் அந்த டெய்லரையும், காரா சேவு சாப்பிடும் அவர் பெண்களையும் காலம் என்ன செய்திருக்கும்?

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்.

Wednesday 25 December 2013

யாருக்குச் சொந்தம்?

அன்று காலை எட்டு மணி இருக்கும். என் வீட்டு மாடி அறைக்கு ஒரு புத்தகம் தேடுவதற்காக படியேறினேன்.

இரண்டு மூன்று படிகள் ஏறுவதற்குள்ளாகவே மாடிப்படியோரம் நின்ற வளைந்த தென்னை மரத்தில் உட்காந்திருந்த காகம் ஒன்று, ஏதோ உயிர் போகிற மாதிரி “கா, கா!” என்று கத்தியது. உடனே அக்கம் பக்கத்து மரங்களில் உட்காந்திருந்த அதன் சாதி சனங்களான பல காகங்கள், ‘இதோ வந்துட்டேன், வந்துட்டேன்!’ என்பது போல் “கா, கா!” என்று கத்திக்கொண்டே தென்னை மட்டைகளிலும், மாமரக் கிளைகளிலும் அமர்வதும், பறப்பதுமாக என்னைச் சுற்றியே வட்டமடிக்கின்றன.

‘என்ன இது! நம்ம வீட்டு மாடியிலே நம்மையே ஏறக்கூடாது என்பது போல் கத்துதுங்களே!’ என்று எரிச்சலோடு ‘ச்சூ, ச்சூ!’ என்று மாடி அறைக்குள் நுழைந்தேன். காக்கைச் சத்தமும் ஓய்ந்தது.
அறைக்குள்ளிருந்து  வெளியே வந்ததும், மீண்டும் ‘கா, கா!’ என்ற கூச்சல். அதிலும் முதன் முதலாக கத்த ஆரம்பித்த காகம் தான் ‘எங்கடா இங்கே வந்தே!’ என்பது போல் விடாமல் கரைவதும், மேலே எழும்பி என் தலையை கொத்த வருவதுமாக பயமுறுத்தியது.

கீழே கிடந்த நீளமான குச்சி ஒன்றை எடுத்து ‘கிட்டே வந்தே, தொலைச்சிடுவேன்!’ என்று பயமுறுத்தினேன். ம்கூம்! அது பயப்படுவதாக தெரியவில்லை.

“இதோ பார்! இந்த வீடு, நான் கட்டியது. நீ உக்காந்து கத்துறியே, அது நான் வச்சு ஆளாக்கிய எனக்குச் சொந்தமான தென்னை. அதிலே உக்காந்துகிட்டு என்னையே வரக்கூடாதுன்னு ஆர்ப்பாட்டம் பண்றியா?” என்று மிரட்டினேன்.
அது மசிவதாக இல்லை. ‘கா, கா’ என்று என்னைப் பார்த்தவாறே பறந்து, பறந்து கத்தியது, அந்தப் பொல்லாத காகம்.

‘என்ன இது! புதுத் தொந்தரவா இருக்கே!’ என்று எரிச்சல்பட்டப்படியே கீழே இறங்கினேன்.

அப்போதுதான் என் இல்லத் தலைவி சொன்னார்.

“ஏங்க நம்ப மாடிப்படி தென்னையிலே காக்கா ஒண்ணு கூடு கட்டியிருக்குங்க. இனிமே அது குஞ்சு பொறிச்சு, அதுங்க பறக்குற வரைக்கும் யாரையும் அண்டவிடாதுங்க. பாத்து ஜாக்ரதையா போயிட்டு வாங்க!”

“அப்படியா! இந்த வீடு, மரம் எல்லாம் நம்மதுதான்னு நாம வச்சிருக்கிற பட்டா, சிட்டா, புக், இதெல்லாம இந்தக் காக்காக்கிட்டே செல்லாதா!”

“அதுகிட்டேதான் கேக்கணும்!” என் மனைவி சிரித்தார்.

இந்த வீடும், மரங்களும் உண்மையில் யாருக்குதான் சொந்தம்?

- 'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்

Sunday 1 September 2013

அக்கப்போர் மனிதர்

து  மதியப்பொழுது. என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவரின் எதிர் வீட்டு முன்பாக ஒரு மாதிரியான ஆட்கள் சிலர் கூடி நின்று கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்தனர். வாசலில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபடி எந்த வித சலனமும் இல்லாமல், எதுவுமே அமைதியாக  நின்றுகொண்டிருந்தார்.

"நீ என்ன பெரிய இவனா? யாரு என்ன பண்ணா உனக்கென்னய்யா? நீ என்ன போலிசா? இல்ல, ஊருக்கே நாட்டாமையா? செல் போன் இருந்தா யாருக்கு வேணுன்னாலும் போன் பண்ணி கம்ப்ளைண்ட் பண்ணிடுவியா? பண்ணிட்ட்டா, எங்கத் தலையைச் சீவிடுவானுங்களா?" கூட்டத்தில் நின்ற ஒருவன் கூப்பாடு போட்டான்.

இன்னொருவன், "இதோ பாருய்யா! வேலைக்குப் போனோமா, சம்பளம் வாங்குனோமா, குடும்பம் நடத்தினோமான்னு இருக்கணும்.  உனக்கு நல்லது. அதை விட்டுட்டு, அவன் அதைப் பண்றான், இவன் இதைச் செய்றான்னு கண்டவன்கிட்ட கொளுத்திப் போட்டுட்டேயிருந்த, ஒம்பாடு ரொம்ப திண்டாட்டமாயிடும். கேக்க நாதி இருக்காது. ஆமா!" என எச்சரிக்கைச் செய்தான்.

ஆளாளுக்கு திட்டிவிட்டு அவசர அவசரமாக கலைந்து போனார்கள். திட்டு வாங்கிய மனிதர் அப்படியென்ன தப்பு செய்தார் என்று வந்தவர்கள் பேசியதிலிருந்து ஒன்றுமே புரியவில்லை. என்னதான் இருந்தாலும், 'நம் பக்கத்துக்கு வீட்டுக்காரரை யார் யாரோ இப்படி சத்தம் போடுகிறார்களே!' என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லையே என்று எனக்குள் கோபம் எழுந்தது.

நண்பன் வீட்டுக்கதவை சற்று வேகமாகவே தட்டினேன். கதவைத் திறந்தவனிடம், "என்னடா இது! வெளியே வந்து என்னன்னு கூட கேக்கமாட்டியா?" என்று ஆத்திரப்பட்டேன்.

"அதுவா! அந்தாளு ஒரு அக்கப்போருப்பா! அதான் இப்படி வாங்கிக் கட்டிக்கிறான்"

"அக்கப்போரா? என்னப்பா சொல்ற?"

 "ஆமாம்ப்பா! கரண்ட் கட்டாயிடுச்சின்னா, ரோடு மோசமாயிடுச்சின்னா, டெலிபோன் செத்து போயிடுச்சின்னா, தண்ணி வரலைன்னா போதும். இந்த ஆளுக்கு மூக்கு வேர்த்துடும். உடனே, அந்தந்த டிபார்ட்மெண்ட் ஆளுங்க மேல அவங்க மேலதிகாரிங்களுக்கு ஒரு கம்ப்ளைன்ட்டை போட்டுடுவாரு. இந்தாளுக்கு இதான் வேலை.

இப்ப வந்து கத்திட்டுப் போறானுங்களே! அவனுங்க ரேஷன் பொருளையெல்லாம் பதுக்கி வச்சிருக்கானுங்கன்னு இந்தாளு போன் பண்ணி கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு. இவருதான் புகார் சொன்னதுன்னு அவனுங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. உடனே, எல்லாப் பொருளையும் பங்கிடு பண்ணிட்டு இவரையும் ஒரு வழி பண்ணிட்டு போறானுங்க.

இவருக்கு ஏன் இந்த வேலை? தான் உண்டு, தன வேலை உண்டுன்னு இருக்க வேண்டியதுதான்னு இருக்க வேண்டியதுதானே. இதுல நாம என்ன பண்ண முடியுங்கிற? சரி! அதை விடு! நீ முதல்ல வா!"

உயர்ப்படிப்பு படித்து உயர்ப்பதவியில் இருக்கும் என் நண்பன் சர்வசாதரணமாக சொன்ன அந்த விளக்கத்தைக் கேட்டு திகைத்துப்பொய் நின்றேன் நான்.

- உத்தமசோழன்
'கிழக்கு வாசல் உதயம்' ஜூலை 2013 இதழில்

Tuesday 30 April 2013

வாழ்க்கைப் பாடம்


திருச்சியில் செல்வசுந்தரி என்று எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். என் மகளாகவே மாறி என் மீது அன்பைச் சொரிபவர்.

ஒருநாள், என்னைக் கைப்பேசியில் அழைத்தார். ஒரு இதழின் பெயரைச் சொல்லி, அதில் தன்னுடைய கதை வந்திருப்பதாகவும், அதைப் படித்து எப்படி இருக்கிறதென்று நான் சொல்வதைக் கேட்க ஆர்வமாய் இருப்பதாக சொன்னார்.

கதை வந்த இதழ், ஒரு நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பு. தகவல் சொன்னதோ, அன்று மாலைதான். நான் வாங்குவதோ, வேறொரு நாளிதழ். உடனே, பைக்கில் கடைக்குப் போனால், "தீந்துடுச்சு சார்!" என்றார்கள்.

எழுத்தாளர் மகளைக் கூப்பிட்டு, "பேப்பர் கிடைக்கலம்மா. என் நண்பர் ஒருத்தர் அதான் வாங்குறார். அவர்கிட்ட சொல்லி இருக்கேன். காலையில் கொண்டு வந்து தர்றதா சொல்லி இருக்கார். காலையில் படிச்ச உடனே கண்டிப்பா போன் பண்றேன்" என்றேன்.

றுநாள் இதழைக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்ன நண்பர் காலையில் என் வீட்டு வழியே பைக்கில் தென்பட்டார். நான் கேட்ட இதழைக் கொண்டு வருகிறார் என்று நினைத்து, அவசரமாக வாசலுக்கு வந்தால், அவர் நிற்காமலே நேரே போய்க் கொண்டேயிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அன்று மதியம் "படிச்சிட்டீங்களாப்பா?" என்று எழுத்தாளரிடமிருந்து ஆர்வம் பொங்கும் கேள்வி. "இன்னும் இல்லேம்மா! நண்பர்கிட்ட சொன்னேன்.தர்றேன்னு சொன்னவர் எதுவும் சொல்லாம, பாத்தும் பாக்காத மாதிரி போய்க்கிட்டே இருக்காரும்மா. இனி, அவர்கிட்ட கேக்கமாட்டேன். எப்படியாவது ஏஜென்ட்கிட்டேயிருந்து வாங்கியாவது படிச்சிட்டு சொல்றேம்மா."

"என்னப்பா நீங்க? நண்பர்ங்கிறீங்க! அப்புறம் ஏன் இதுக்குப் போய் அவர் மேல இப்படி கோபப்படுறீங்க? அவருக்கு என்ன வேலையோ, என்னமோ! எதுக்காகவும் யார் மேலேயும் நாம சடாருன்னு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாதுப்பா. நானே ஒரு இதழை கொரியரில் அனுப்பி வைக்கிறேம்ப்பா!"

எனக்கு மேலும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

ன்று முன்னிரவு நேரம். நண்பர் அந்த இதழோடு வந்து நின்றார்.

"யாரோ வீட்டுக்கு வந்தவங்க அந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அதை விசாரிச்சு தேடிப்பிடுச்சி வாங்கியாந்தேன். புத்தகத்தோடு வரணும்னுதான் உங்கக்கிட்ட காலையில ஏதும் பேசாம போயிட்டேன்." என்று சிரித்தார்.

எனக்கு கவலை கொஞ்சம் அதிகமாகி விட்டது.

'எப்போதுதான் வாழ்க்கைப் பாடத்தை நாம் சரியாகக் கற்றுகொள்ளப் போகிறோமோ, தெரிய வில்லையே!'

- கிழக்கு வாசல் மார்ச் இதழில்

Saturday 27 April 2013

எதற்காக பேசவேண்டும்?

மறைந்த எழுத்தாளர் நகுலனைப் பற்றி ஒரு சம்பவம்.
அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். இரண்டு பேரும் மணிக்கணக்கில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார்களாம்.
வந்தவர் புறப்பட்டார். வாசல் வரை வழியனுப்ப வந்த நகுலன் அவரைப் பார்த்து கடைசியாக வாய் திறந்து,"போறுமோல்லியோ?" என்று கேட்டாராம். அவரும், "போறும், போறும்!" என்று சொல்லி விட்டுப் போய்ச் சேர்ந்தாராம்.
எனக்கு அப்படி ஒரு நண்பர் இருக்கிறார். வயது 86. வீட்டுக்குள் அப்படி ஒரு நிசப்தம். அவரும், அவரது மகளும்தான் வசிக்கிறார்கள். மேஜை, கட்டில், இரண்டு நாற்காலிகள், சுவற்றில் ஒரு பழங்காலக் கடிகாரம். கடிகாரம் ஓடுகிறது.  ஆனால், காலம் நின்றுவிட்டது. பெரியவர் ஐம்பது வருட நினைவுகளில் கட்டிய சிலந்தியாய் வாழ்கிறார். எப்போதாவது என் போன்ற 'பூச்சிகள்' சிக்குவதுண்டு. பேசவே மாட்டார். மெல்ல ஒரு புன்னகை. அவரும் அவர் மகளும்கூட பேசிப் பார்த்ததில்லை. அவர் உடம்பு இஸ்திரி போட்ட மாதிரி தட்டையாக இருக்கும். தலையில் ஒரு காலத்தில் சாயம் பூசியிருப்பார் போலும். பாதி வெளுப்பு; பாதி பழுப்பு. அப்படியே நெருப்புப் பிடித்து எரிந்த தலையில் தண்ணீர் ஊற்றி அணைத்து மாதிரி இருக்கும். நல்ல வாய் நிறைய போடுவார். வெளியே போய்த் துப்பிவிட்டு வருவார். தண்ணீர் குடிப்பார். ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தால், ஏமாற நேறும். மறுபடி அடுத்தச் 'சுற்று' வெற்றிலைப் புகையிலை யோகம்தான். வாய் முழுவதும் அடைபட்டதும், கண்வழி பேச முயற்சிப்பார். ஒரு பல்லி ஏதோ பேசும். மோவாயைத் தடவிக் கொள்வார்.
பேப்பர் வாசிப்பது இல்லை. கடைசியாக காந்தி சுடப்பட்டச் செய்தியை வாசித்த நாள் முதல் பேப்பர் வாசிப்பதை நிறுத்தி விட்டதாக ஒறுமுறை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீட்டின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. எப்போதாவது வருகிற நான், பால் பாக்கெட் போடுகிற பையன், வாசல் பெருக்கும் வேலைக்காரி, யாரோடும் பேசுதில்லை.
எதற்காக பேசவேண்டும்?
- கோபாலி, 'கிழக்கு வாசல் உதயம் மார்ச்' இதழில்

Sunday 10 March 2013

தலையணைப் புத்தகம்


நல்ல தமிழில் எழுத வேண்டுமானால் பாரதியைப் படியுங்கள் என்பது போல ஜப்பானிய மொழிநடைக்கு முன்னுதாரணமாக, 'ஸே ஷோனகான்' என்ற பெண் எழுத்தாளரைச் சொல்கிறார்கள்.

ஸே ஷோனகான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானிய மகாராணியிடம் தாதியாக வேலை பார்த்தவர். பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும், அழகும் மிகுந்தவர். அவருடைய வேலை, மாட்சிமை தாங்கிய மகாராணியிடம் சுவையாகப் பேசி, அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். அந்தக் காலத்தில் காகிதம் விலை உயர்ந்த பண்டமாக இருந்தது. ஒரு நாள் மகாராணிக்கு ஒரு பெரிய காகிதக் கட்டு ஒன்றினை சீனாவிலிருந்து வரவழைத்து பரிசாகத் தருகிறார், சேனாதிபதி.

"இதை வைத்து நான் என்ன செய்யட்டும்..?" என்று கேட்கிறார், புன்சிரிப்புடன் மகாராணி, ஷோனகானிடம்.

"என்னிடம் கொடுங்கள். அதை வைத்து நான் ஒரு தலையணை செய்கிறேன்" என்கிறார் அவர்.

தலையணை என்றால் நிஜமான தலையணை அல்ல. வாழ்க்கையில் தான் கண்டு, கேட்டு ரசித்த நிகழ்வுகளை சின்னஞ்சிறுக் குறிப்புகளாக எழுதி ஒரு தலையணை அளவு புத்தகமாக்கி, மகாராணியிடம் சமர்ப்பிக்கிறார். அதைப் படித்து மகாராணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒரு மரப்பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அதற்குப் பின் ஷோனகான் ஏதாவது எழுதினாரா? அவர் என்ன ஆனார்? என்பது பற்றியெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் ஏதுமில்லை.

ஆனால், ஷோனகான் எழுதிய தலையணைப் புத்தகம் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டு. இன்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த இலக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. ஜப்பானிய மொழி நடைக்கு பள்ளிக் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய அற்புதமான வழிகாட்டியாகத் திகழ்கிறது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சுவையான சம்பவங்கள், வித்தியாசமான பார்வையில் கிடைத்த நிகழ்வுகள், சின்னச் சின்ன அனுபவங்கள் எவ்வளவோ இருக்கும்.

ஷோனகான் ஒரு தலையணைப் புத்தகம் தந்தார்.

என்னிடம் இருப்பதோ, ஒரு கைக்குட்டை. மனசு என்கிற மடிக்கப்பட்ட அந்தக் கைக்குட்டையைப் பிரித்தால் வாழ்க்கை விரிகிறது.

நட்சத்திரங்களும், மேகத்துணுக்குகளும், மழைத் துளிகளுமாய் சின்னச் சின்னக் கதைகள். இனிமேல் உங்களுக்காக.

கோபாலி 
'கிழக்கு வாசல் உதயம்'
பிப்ரவரி இதழில் 

நிரம்பி வழியும் காலிக்கோப்பை


தேநீரை ஊற்றும்போது மட்டுமல்ல; சில சமயம் காலியாக இருக்கும்போதும் கோப்பை நிரம்பி வழிகிறது. கோப்பையில் வெறுமையும் நிரம்பி வழிகிறது.

தேநீரோ, வெறுமையோ, கோப்பை நிரம்பி வழிவதைக் கண்டுகொண்டால், தேநீரைப் போல வெறுமையும் இனிக்கும்! வாழ்க்கையும் இனிக்கும்!

நிரம்பி வழிவதான உணர்வு இருந்தால் போதும்.

அப்படியான உணர்வில் எழுதப்பட்ட இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை உங்கள் ரசனை எனும் கோப்பையில் ஊற்றுகிறேன்.

சில சமயம் தேநீர்! சில சமயம் வெறுமை! கோப்பை நிரம்புவது நிற்பதில்லை!

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' இதழில்

Saturday 26 January 2013

சேகுவேராவின் தோழன்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி அது! வந்தவர்கள் ஒருபுறம் பிடித்தமானவர்களோடு, சொந்த பந்தங்களோடு அமர்ந்து அரட்டையடித்துக்  கொண்டிருந்தனர். அதில், ஒரு இளைஞன் தன்னைச் சுற்றி நடந்த சில அநியாயங்களை எதிர்த்து நண்பர்களோடு சேர்ந்துப்  போராடியதையும், தொடர்ந்து வழக்கு, கோர்ட், விசாரணை என்று அலைந்ததையும் உணர்வு பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்த இளைஞனின் உறவினரான சபாரிக்காரர் ஒருவர், முகம் சுளித்தபடி சொன்னார்.

"எப்போதுமே எனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கிறது பிடிக்காது. நாம உண்டு... நம்ப குடும்பம் உண்டுன்னு வாழறதுதான் சரி..! தலையே போனாலும் அடுத்த வீட்டை எட்டிப் பாக்குறது சரி இல்லை..!"

அவர் அப்படி சொன்னது போலவே அச்சு பிசகாமல் வாழ்பவர். அது மட்டுமல்லாமல், அந்த இளைஞன் மீது அவருக்கு கடுங்கோபம் உண்டு.
"இன்னும் ஒரு சொந்த வீடு கட்டத் துப்பில்ல. தன் பிள்ளைய ஒரு நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்க வக்கில்ல. கடனுக்குக் கூட  ஒரு பைக் வாங்க வழியில்ல..! ஒரு ஓட்டை சைக்கிளில் 'லொடக்கு லொடக்கு'ன்னு போய்க்கிட்டு... இந்த ஊரைத் திருத்துற வேலை தேவையா..?" அவன் காதுபட முணுமுணுக்கிறார்.

அப்படி சொன்னவரும், அவரது மனைவியும் அரசுப் பணிகளில் இருக்கின்றனர். கைக்கொள்ளாத சம்பளம். வசதியான வாழ்க்கை. அவரது கழுத்து, கை, விரல்களில் 'தங்கங்கள்' மின்னிக் கொண்டிருந்தன. அவர் மனைவியின் உடம்பிலோச் சும்மக்க முடியாத அளவிற்கு.
திடீரென்று ஒரு நண்பர், சபாரிக்காரைப் பார்த்து, "என்ன சார் இது..? பேன்ட் முழுக்க முழங்காலுக்குக் கீழே ஏதோ புள்ளிப் புள்ளியாக் கரையா இருக்கு!"
"வேறென்ன..? சாக்கடைதான்..! நம்ப வீடு புறநகர்ப் பகுதியாச்சா! சந்து மாதிரி ஒரு சின்ன ரோடுதான் எங்க வீட்டுக்கெல்லாம் போகிற ஒரே வழி. ஆனா.. அந்த ரோட்டு முனைதான் கடைக்காரங்களுக்கேல்லாம் குப்பைக் கழிவுக் கொட்ற இடம். வீட்டுகாரங்களுக்கு சாக்கடை விடற இடம். எப்போதுமே சேரும்... சகதியுமாத்தான் இருக்கும். அதை கிராஸ் பண்றதே ஒரு பெரிய சவால்தான். அவசரமா பைக்ல வந்ததுல பட்டுடுச்சு. அது பாதையாச்சேன்னு எல்லாருக்கு தெரியாமலா இருக்கும்..? எப்படி பொய் கேக்குறது அவங்களை..? நமக்கெதுக்கு வம்பு..?"

தனது கையாலாகாத்தனத்தை இப்படி புலம்பி விட்டுச் சென்றார், அந்த சபாரி.
அந்த இளைஞன் நம்மிடம் சொன்னான். "மூணே  நாள்..! அந்தப் பாதை சுத்தமாகுதா இல்லையா பாருங்க..! நாளைக்கே முனிசிபல் ஆபீஸ் வாசல்லே நாங்க பொய் நிப்போம்."

நான் கேட்டேன். "ஏந்தம்பி..! பிரச்சினை அவங்களது..! போராட வேண்டியதும் அவங்கதானே..!"

"உங்களுக்குத் தெரியாதா சார்..! அநியாயத்தை எதிர்த்து வசதியானவங்களும்... பாதுகாப்பான நடுத்தர வர்க்கமும் ஒருநாளும் போராடமாட்டாங்க. இருப்பதை இழந்துட்டா என்ன பண்ணுறதுங்கிற பயம். இழப்பதற்கு எதுவுமே இல்லாத என்னை மாதிரி ஏழைதான் போராடுவான்..!"

இப்படித் தீர்மானமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான், அந்த 'சேகுவேராவின் தோழன்!'

'அக்கிரமத்தையும்... அநியாயத்தையும் கண்டு யாரெல்லாம் கொதித்தேழுகிறார்களோ... அவர்களெல்லாம் என் தோழர்களே..!"

இப்படித்தானே  சொன்னான், சேகுவேரா!

கிழக்கு வாசல் உதயம்

கிழக்கு வாசல் உதயம் இதழைத் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 'நம்மால் ஒரு இதழை தொடங்க முடியுமா..?' என்பதில் தொடங்கி, 'இதழை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்..?' என்பதில் வந்து நிற்பதில் நிச்சயம் பெருமிதமாகவே இருக்கிறது.


கிழக்கு வாசல் இதழுக்கு ஒரு வலைத்தளம் தொடங்க வேண்டும் என்பது என் ஆசை! எனக்கு இரண்டு 'புத்திரப் பாக்கியங்கள்' இருக்கின்றன! 'செய்துடுவோம்ப்பா..!' இதுதான் வெகு ஆண்டுகளாய் அவர்களிடம் வந்து கொண்டிருந்த பதில்! கடைசியில், இந்த 'ப்ளாக்' அளவில் முன்னேறி இருக்கிறோம்.

இதழில் வந்த கட்டுரைகள் இங்கே பதிவேற்றப்பட்டுள்ளன! சுவைக்கவும்.
நன்றி!

கிழக்கு வாசல் இதழுக்குச் சந்தாதாரர் ஆகுவதற்கு முயற்சி செய்யவும். தொடர்புக்கு: உத்தமசோழன் - 9443343292