Thursday 20 October 2016

இதுவும் இந்தியாவில்தான்!

உலகில் எத்தனையோ ஆட்சி முறைகள் இருக்கின்றன. முடியாட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி இராணுவ ஆட்சி, பாசிச ஆட்சி, நாசிச ஆட்சி எனப் பல நாடுகளில் பலவிதமான ஆட்சி முறைகளில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் சில குறைகளும், சில நிறைகளும் கலந்தே இருக்கின்றன. இருப்பினும், அரசியல் அறிஞர்களால் நிறைகள் அதிகமாகவும், குறைகள் குறைவாகவும் உள்ள ஆட்சிமுறை, மக்களாட்சி முறைதான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மக்களாட்சி முறை நம் பாரத நாட்டில், பலரால் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாதியவாதமும், மதவாதமும், ஊழலும், கையூட்டும் நமது மக்களாட்சி முறையை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மக்களாட்சி முறைக்கு மாண்பு சேர்த்த ஒரு நிகழ்வை நாம் தெரிந்து கொண்டால், இன்று எத்தகைய சீரழிவை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.
அடிமை விலங்கை உடைத்து எறிந்து இந்தியா, தன்னைக் குடியரசு நாடாக அறிவித்தது. 1952ஆம் ஆண்டு நாடு முழுமைக்குமான முதல் பொதுத் தேர்தல் நடந்தது. இருபத்தியொரு வயது வந்த அனைவருக்கும் சாதி, மத, வர்க்க வேறுபாடில்லாமல் வாக்குரிமை வழங்கப்பட்டது. அதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பட்டா வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களுக்கும், பணக்காரர்களுக்கும், படித்த பட்டதாரிகளுக்கும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அவர்களால்தான் சரியாக வாக்களிக்க முடியும் என்பது அவர்களது கருத்து.
இதனால் உலகமே இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக மேல்நாடுகளில் இந்தியாவை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தன. காரணம் இங்கிலாந்து நாட்டின் மக்களாட்சி முறை பக்குவப்பட்டது. பல நூற்றாண்டுகளாகச் சிறிது, சிறிதாகக் குடியாட்சி முறைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட மூத்த மக்களாட்சி நாடு அது. பிரான்ஸ் போன்ற நாடுகளும் அப்படியே. அமெரிக்காவோ 500 ஆண்டுக் காலக் குடியரசு நாடு. ஆனால் இந்தியாவோ புதிதாகக் குடியரசாக மலர்ந்த ஒன்று. இந்திய மக்களோ படிப்பறிவில்லாதவர்கள். குடியாட்சி முறைக்குப் பக்குவப்படாதவர்கள். இதனால்தான் இகழ்ச்சியோடும், அவநம்பிக்கையோடும் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலைப் பார்த்தன.
இந்தியாவை மக்களாட்சி நாடாக, மதச்சார்பற்ற நாடாக மாற்றியவரும், வாக்குரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டுரிமை என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் நமக்குக் கிடைக்கக் காரணமானவரும், முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தனது கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாடெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வந்தார். நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த கட்சி என்பதாலும், பண்பாளர் நேருவின் தலைமை மீது கொண்ட நம்பிக்கையாலும் பாரத நாடெங்கும் காங்கிரஸ் ஆதரவு அலை அடித்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் சார்பில் கழுதை நின்றால்கூட வெற்றி என்ற சூழ்நிலை நிலவியது.
இன்று மத்திய பிரதேசம் என்று அழைக்கப்படும் மாநிலம், அன்று விந்தியப் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் ‘ரேவா’ என்றொரு சட்டமன்றத் தொகுதி இருந்தது. அந்தத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராவ் ஷிவ்பகதூர் சிங் என்பவர் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் சாதாரண ஆள் இல்லை. ரேவா சமஸ்தானத்தின் அரசர். மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவர். அதனால் காங்கிரஸ் கட்சி இதற்கு முந்தைய தேர்தலில் வேட்பாளராக்கி வெற்றிபெற வைத்து அமைச்சராகவும் ஆக்கியிருந்தது.
ராவ் ஷிவ்பகதூர் சிங்
நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காகப் பரப்புரை செய்து ஆதரவு திரட்டி வந்த பிரதமர் நேரு, ரேவா தொகுதிக்கும் வந்தார். விடுதலைப் போராட்டக் காலத்தில், நேருவுடன் ஒரே சிறையில் இருந்த தியாகி ஒருவர் அவரிடம் சில செய்திகளைக் கூறினார். கூறப்பட்ட செய்திகள் சினத்தின் உச்சிக்கு நேரு பெருமகனைக் கொண்டு சென்றன. தியாகியை அனுப்பிவிட்டுச் சிறிது நேரச் சிந்தனையில் ஆழ்ந்தார் நேரு.
அன்று பெரியதொரு பேரணியும், பேரணி முடிவில் பெரிய பொதுக்கூட்டமும் இருந்தது. பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை நேரு அறிமுகம் செய்து வைத்துப் பேசவிருந்தார். இந்தியாவின் முடிசூடா மன்னரான நேரு பேசவிருக்கும் பொதுக்கூட்டம் என்றால் கேட்க வேண்டுமா? கட்டுக்கடங்காத கூட்டம் மைதானத்தில் நிரம்பிக் கிடந்தது. மேடையேறிய நேரு, மற்றவர்களைப் பேச வேண்டாமென்று கூறி நிறுத்திவிட்டு நேரடியாகத் தானே ஒலிவாங்கி முன் நின்று பேசத் தொடங்கினார். மரபுப்படியான சில வார்த்தைகளைப் பேசிவிட்டு, தான் கூற வந்த செய்திக்கு வந்தார் நேரு.
“பெரியோர்களே! இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பெரும் போராட்டத்தை நடத்திக் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றியைத் தேடித் தந்தது. உரிமை பெற்ற மனிதர்களாக நாம் ஆனோம். அது மட்டும் போதாதென்று குடியாட்சி முறையையும், காங்கிரஸ் பேரியக்கம் பெற்றுத் தந்தது. நம்மை நாமே ஆண்டு கொள்ளும் முடியாட்சியில், நமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முதல் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். இந்தியத் திருநாட்டின் சுதந்திரமும், ஒருமைப்பாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டுமானால், காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருப்பது அவசியம்“ எனக் கூறி நிறுத்திய நேரு, சிறிது இடைவெளி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்.
“ஆனால், அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக நாங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொருவரையும் ஜவஹர்லால் நேருதான் தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அது நடைமுறை சாத்தியமல்ல. அந்தந்த மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் வட்டாரக் காங்கிரஸ் கமிட்டிகள் பரிந்துரை செய்யும் வேட்பாளர்களைத்தான் நாங்கள் தில்லியில் ஏற்றுக்கொள்கிறோம். அவ்வளவே! அதனால், காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து வேட்பாளர்களுமே அப்பழுக்கற்றத் தியாகிகள் என்றோ, தகுதியானவர்கள் என்றோ நீங்கள் கருதிவிடக்கூடாது!”
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சு தொடரத் தொடர மேடையிலிருந்தவர்களின் முகங்களில் குழப்பம் கூடுகட்டத் தொடங்கியது. பொதுமக்கள் முகங்களிலோ வியப்புப் புறாக்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. நேரு பேச்சைத் தொடர்ந்தார்.
“எனக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியம். அந்தக் கட்சியால்தான் இந்த நாட்டை ஒற்றுமையாகவும், சுதந்திர நாடாகவும் பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், காங்கிரசைவிட எனக்கு ஜனநாயகம் முக்கியம். ஜனநாயகம் இருந்தால்தான் இந்த நாட்டின் சுதந்திரமும், ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால் நீங்கள் நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்!”
சாதாரணமாகப் பேசிவந்த நேரு, சிறிது இடைவெளி விட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். இப்போது அவர் குரல் உயர்ந்தது. குரலில் சினம் துளிர்விட்டது.
“மக்களே! நீங்கள் வாக்களிக்கும் போது கொலைகாரர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள், சமூக விரோதிகள், பதுக்கல் பேர்வழிகள், பதவியைத் தங்களது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களைத் துன்பப்படுத்துபவர்கள், சாதிவெறி பிடித்தவர்கள் இப்படிப்பட்டவர்களை அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாகவே இருந்தாலும், அருள்கூர்ந்து தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அப்படிப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகம் சீர்குலைந்து நமது சுதந்திரத்திற்கே பொருளில்லாமல் போய்விடும்!”
பேச்சை நிறுத்திய நேரு, மேடை மேலிருந்த மன்னரும், கட்சியின் வேட்பாளருமான ராவ் ஷிவ் பகதூர் சிங் மீது தன் பார்வையை வீசிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் குரலில் வெப்பம் அதிகரித்தது. வேதனையும், சினமும் அவர் முகத்தில் கொப்பளித்தது.
“நான் இங்கு வரும்போது எனக்கு ஒரு செய்தி தெரியவந்தது. இந்தச் சமஸ்தான மன்னர் ராவ் ஷிவ் பகதூர் சிங்கின் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும், விந்தியப் பிரதேச அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இவர், தனது உதவியாளருடன் சேர்ந்து பன்னா வைரச் சுரங்க நிறுவனத்திற்குச் சாதகமாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து உதவி இருப்பதாகவும், அதற்காக 25000 ரூபாய் இலஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன். இப்படிப்பட்ட நபர்களை நீங்கள் நேருவின் பிரதிநிதியென்று நினைத்துத் தேர்ந்தெடுத்தால் அது ஜனநாயகத்திற்குச் செய்கின்ற துரோகமாகும். உங்களுக்குக் காங்கிரஸ் கட்சியோ, சோஷலிஸ்ட் கட்சியோ பிடிக்கும் என்பதற்காக, அந்தக் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர் யார் எவராக இருந்தாலும் வாக்களித்து விடாதீர்கள். எங்களது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவே இருந்தாலும், ராவ் ஷிவ் பகதூர் சிங் ஒரு தவறான வேட்பாளர். எனவே இவரைத் தோற்கடித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை. அனைவருக்கும் வணக்கம்!”
தன் சிம்மக் கர்ஜனையை முடித்த நேரு, மேடையை விட்டு இறங்கித் தான் வந்த வாகனத்தில் புறப்பட்டுவிட்டார். மேடையிலிருந்த கட்சிக்காரர்களும், கூடியிருந்த மக்களும் பிரமை பிடித்து நின்றனர். மன்னரும், வேட்பாளருமான ராவ் பகதூர் சிங்கோ, தாங்க முடியாத அவமானத்தால் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
தன் கட்சி வேட்பாளர் என்று பார்க்காமல், அவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி “இவருக்கு வாக்களிக்காதீர்கள்!” என்ற நேருவின் பேச்சால் மன்னரின் தலை கவிழ்ந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி தலைநிமிர்ந்தது.
தேர்தல் நாள் வந்தது. மக்கள் திரண்டு வந்து வாக்களித்தார்கள். பெரும் செல்வாக்கு பெற்ற அரசரான ராவ் ஷிவ் பகதூர் சிங், நேற்று வரை தன்னால் ஆளப்பட்ட மக்களால் தோற்கடிக்கப்பட்டார்! தோற்கடிக்கப்பட்டதோடு வைப்புத் தொகையையும் பறிகொடுத்தார்!!
மேலும், அவர் மீது நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறை சென்றதோடு, ரேவா சிறைச்சாலையிலேயே மரணமடைந்தார்.
சந்தேகம் வேண்டாம்! இப்படி நடந்தது நம் இந்தியாவில்தான்!
கவிஞர் பாரதன் | கைப்பேசி: 9362650100
கிழக்கு வாசல் உதயம் ‘ஆகஸ்ட்' 2016 இதழில் இடம்பெற்ற ‘மகத்தான மனிதர்கள்.. வியப்பான நிகழ்வுகள்!’ பகுதியிலிருந்து