Thursday 23 August 2018

மகனின் நினைவாக ஒரு பல்கலைக்கழகம்!

அந்தத் தம்பதி ஒரு ரயிலில் வந்து அந்த ஊரில் இறங்கியிருந்தார்கள். அது காலை நேரம். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, தங்களைக் கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு உடனே கிளம்பி விட்டார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த இடம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல்வர் இருக்கும் அலுவலகம்.
முன்கூட்டியே பல்கலைக்கழக முதல்வரைச் சந்திக்க அவர்கள் அப்பாயின்ட்மென்ட் எதையும் வாங்கியிருக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது அவரைச் சந்தித்து விடவேண்டும் என்கிற வேட்கை மட்டும் அவர்களுக்கு இருந்தது. முதல்வரின் செக்ரட்டரியிடம் போனார்கள். முதல்வரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். செக்ரட்டரி அந்தக் கணவன், மனைவி இருவரையும் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையில் அவர்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் மிக முக்கியமான ஒரு பல்கலைக்கழகத்தின் முதல்வரைச் சந்திக்கப் போகும் போது உடை விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறையைக் கூட அவர்கள் செய்திருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அப்பாயின்ட்மென்ட் எதுவும் அவர்களிடம் இல்லை.
“நாங்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டும்” என்றார் அந்த ஆண்.
“அவர் ரொம்ப பிஸியாக இருக்கிறார்” என்றார் அந்தப் பெண் செக்ரட்டரி.
“சரி, அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார் கணவருடன் வந்திருந்த அந்தப் பெண்மணி.
சில மணி நேரங்களில் செக்ரட்டரி அவர்கள் வந்திருந்ததை மறந்தே போனார். காத்திருந்து பார்த்துவிட்டு, பல்கலைக்கழக முதல்வரை சந்திக்க முடியாமல், அவர்களாகவே திரும்பிப் போய்விடுவார்கள் என்பது அவரின் எண்ணம். மாறாக, அந்தத் தம்பதி இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் காத்திருப்பு செக்ரட்டரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இனி அவர்களை வெளியே போகவும் சொல்ல முடியாது. எனவே, பல்கலைக்கழக முதல்வரின் அறைக்குள் போனார். விஷயத்தைச் சொன்னார்.
“நீங்கள் சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினால் போதும், அவர்கள் போய்விடுவார்கள்” என்றார். முதல்வர், பெருமூச்சுவிட்டபடி தலையை அசைத்தார். உண்மையில், வெளியே காத்திருக்கும் அந்தத் தம்பதியிடம் பேசுவதற்கு அவருக்கு நேரமிருக்கவில்லை. அதோடு, அவர்கள் அணிந்து வந்திருந்த உடை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அவர் ஏற்கெனவே, ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்திருந்தார்.
தம்பதி உள்ளே வந்தார்கள். எரிச்சலோடும், கொஞ்சம் அகம்பாவத்தோடும் பார்த்தார் முதல்வர். வந்தவர்கள் முதல்வருக்கு வணக்கம் சொன்னார்கள். அந்தப் பெண்மணி தான் முதலில் பேசினார். “எங்களுடைய மகன் இந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்தான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. இங்கே படிக்க வந்த நாட்களில் மகிழ்ச்சியாகவும் இருந்தான். ஒரே வருடம்தான். டைஃபாய்டு காய்ச்சல் வந்து இறந்துபோனான். நானும் என் கணவரும் அவனுக்காக இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடிவெடுத்திருக்கிறோம். அதாவது, இந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே,
இதைக் கேட்டு முதல்வருக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது, “மேடம்! இங்கே படிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பது என்பது முடியாத காரியம். அப்படிச் செய்தால், இது பல்கலைக்கழகமாக இருக்காது; கல்லறையாகத் தான் இருக்கும்,”
அந்தப் பெண்மணி உடனே சொன்னார், “இல்லை, இல்லை. நாங்கள் இங்கே எங்கள் மகனின் சிலையை வைப்பதற்காக வரவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு, அவன் நினைவாக ஒரு கட்டடத்தைக் கட்டித் தரலாம் என்று வந்திருக்கிறோம்.”
முதல்வர் இப்போது அவர்களை ஏளனமாகப் பார்த்தார். மிகச் சாதாரணமான உடையிலிருக்கும் இவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குக் கட்டடம் கட்டித் தரப் போகிறார்களாம். “கட்டடமா? ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டடத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகுமென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்க நாங்கள் எவ்வளவு செலவழித்திருக்கிறோம் தெரியுமா? ஏழரை மில்லியன் டாலர்,” என்றார் முதல்வர்.
அந்தப் பெண்மணி ஒரு கணம் அமைதியாகயிருந்தார். முதல்வர் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களின் வாயைக் கட்டிவிட்டோம் என்கிற திருப்தி அவருக்கு!
இப்போது அந்தப் பெண்மணி, தன் கணவர் பக்கம் திரும்பினார். “ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்க இவ்வளவுதான் செலவாகுமா? ஏங்க.. நாமே ஒரு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துவிட்டால் என்ன?” என்று கேட்டார். கணவர் சற்றுக்கூட யோசிக்காமல், ‘சரி’ என்பது போல் தலையசைத்தார். பல்கலைக்கழக முதல்வர் அவர்களை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
கணவனும் மனைவியும் எழுந்தார்கள். முதல்வரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வெளியே போனார்கள். பிற்பாடு தான் அவர்கள் யாரென்று ஹார்வர்டு பல்கலைக்கழக முதல்வருக்குத் தெரிய வந்தது. வந்திருந்தவர்கள் லீலேண்டு ஸ்டான்ஃபோர்டு (Leland Stanford) மற்றும் அவரின் மனைவி ஜேன் ஸ்டான்ஃபோர்டு (Jane Stanford) என்பதும், பெரும் பணக்காரர்கள், சமூகத்தில் கௌரவமான இடத்தில் இருப்பவர்கள் என்பதும்!

ஆட்சிமன்ற உறுப்பினர் லீலேண்டு ஸ்டான்ஃபோர்டு, அவரின் மனைவி ஜேன் ஸ்டான்ஃபோர்டு மற்றும் மகன் லீலேண்டு ஸ்டான்ஃபோர்டு ஜூனியர்



ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
அந்தத் தம்பதி தங்களின் மகனின் நினைவாக ஆரம்பித்தது தான் கலிஃபோர்னியா, பாலோ ஆல்டோ-வில் (Palo Alto) இருக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University)!
கட்டுரையாசிரியர்: ஷைலஜா | shylaja01@gmail.com
கிழக்கு வாசல் உதயம் ஆகஸ்ட் 2018 இதழில் வெளிவந்தது.

Friday 6 April 2018

சமூகமும் சுற்றமும் - நாம் அறிந்திடாத இந்திராவின் முகம்

- முனைவர் க. பழனித்துரை | கைப்பேசி: 9159099809

ந்திரா காந்தியின் பிறந்த தின நூற்றாண்டு வந்ததும், போனதும் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அமைதியாக, ஆடம்பரமில்லாத ஒரு விழாவாக நடத்தி முடித்துவிட்டனர் நம் அரசாங்கமும், அரசியல்வாதிகளும், ஏன் காங்கிரஸ் கட்சியும்கூட அந்த ஆளுமையை மறந்துவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பதினான்கு ஆண்டுகள் இந்தியாவைத் தலைமை தாங்கி வழிநடத்தியவரை எப்படி இந்தியா இவ்வளவு எளிதாக மறந்தது என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கின்றது! மறந்துவிட்டதா அந்த அகிலம் புகழ்ந்த ஆளுமையை என்று கேட்கத் தோன்றியது. 

அந்தத் தருணத்தில் புதுக்கோட்டை கல்லூரியிலிருந்து இப்படியொரு அழைப்பு. “நாங்கள் மாணவர்களுக்குத் தலைவர்களை அதுவும் உலகம் போற்றிய தலைவர்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். அந்த வரிசையில் 9-ஆம் தேதி மறைந்த பாரதப் பிரதமர் திரு. இந்திரா காந்தியின் பிறந்த தின நூற்றாண்டையொட்டி ஒரு விழா ஏற்பாடு செய்து இருக்கிறோம். தாங்கள் வந்து இந்திரா காந்தியின் தலைமைப் பண்புகள் பற்றி பேச வேண்டும்“ என்று விழாவை ஏற்பாடு செய்தவர் கேட்டுக்கொண்டார். 

அந்த விழாவிற்கு முன்னேற்பாடுகளைச் செய்தவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். ஓய்வுபெற்ற பேராசிரியப் பெருமக்களும், அறிவுஜீவிகளும். உலகத் தலைவர்களை மாணவர்களிடம் எடுத்துச் செல்லும்போது, இந்திரா காந்தியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவர்களின் பார்வை பாராட்டுக்குரியது. இந்திரா வாழ்ந்த காலத்தில் உலகைத் தன்மீது பார்க்க வைத்த ஓர் ஆளுமை அவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்காது. அப்படிப்பட்ட ஆளுமையை இவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட்டோம். இப்படியும் மறக்குமா இந்தியா இந்திராவை என்று எண்ணிய நேரத்தில் இந்த அழைப்பு வந்ததால் மறுக்காமல், தயங்காமல், ‘உடனே வருகிறேன்’ என்று கூறினேன். 

கூறியபடி கேரளக் கிராமங்களில் சுற்றிவிட்டு முதல்நாள்தான் என் வீடு திரும்பினேன். உற்சாகம் குறையாமல் 9-ஆம் தேதி காலை சரியாகப் பத்து மணிக்குப் புதுக்கோட்டை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தேன். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆரவாரமில்லாமல் அதன் பணியாற்றிடத் தன் இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில் கல்லூரிக்குள் புகுந்தேன். அமைதியான ஆசிரிய மாணவர்கள் கூட்டம் அரங்கினை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு வர ஒப்புதல் அளித்தபோதே முடிவு செய்தேன், இந்திரா காந்தியின் ஆளுமையில் தெரியாத ஒரு பகுதியை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று. அந்த நோக்கத்தில் என் சொற்பொழிவைத் தயார் செய்தேன். 

நீண்ட நாட்களுக்கு முன் என்னை அதிரவைத்த ஒரு நிகழ்வு அந்தப் பேச்சுக்கு அடிகோலியது. மறைந்த நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்களை எங்கள் பல்கலைக்கழகத்திற்கு நான் அழைத்திருந்தேன். அவருக்கு மிகவும் வயதான நேரம். கொச்சியிலிருந்து சென்னை சென்று பின் மதுரை வழியாகப் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஓர் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்.
அந்தச் சொற்பொழிவில் இந்திரா காந்தியை மிகவும் பெருமைப்படுத்திப் பேசினார். அந்த அளவுக்கு வேறு எந்த அறிஞரும் இந்திராகாந்தியை வியந்து பாராட்டியதில்லை எனக்குத் தெரிந்த வகையில். எதற்காக இந்திராகாந்தியை வி. ஆர். கிருஷ்ணய்யர் பாராட்டினார் என்றால், இந்திரா காந்தி சூழலியல் பற்றிய ஒரு புதுக்கருத்தைப் பன்னாட்டு விவாதப்பொருளாக ஆக்கியதற்காக.

ஆம், 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்த ஐ. நா கருத்தரங்கில் பேசும்போது இயற்கை வளங்களுக்கும், ஏழ்மைக்கும் உள்ள உறவுமுறைகளை விளக்கியது உலகத் தலைவர்களை இந்திராகாந்தி ஒரு நாட்டின் தலைவர் என்பதைக்காட்டிலும் மிகச்சிறந்த கருத்தாளராகப் பார்க்க வைத்தது. அவர் தன் உரையைத் துவக்கும்போதே மானுடத்திற்கும், இயற்கைக்கும் உள்ள உறவு முறைபற்றி மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். இயற்கையைப் புரிந்துகொண்டு மானுடம் வாழ முயலவில்லை என்றால், வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும் என்று விளக்கினார். தான் சிறுவயதில் இயற்கையை எப்படியெல்லாம் ரசித்தேன் என்ற அனுபவங்களைக் கோர்வையாக விளக்கி, தான் எவ்வளவு ஆழ்ந்த அறிவும், பற்றும் இயற்கையின்மேல் கொண்டவள் என்பதை அந்த உரையில் விளக்குகின்றார். தான் எவ்வளவு செல்வச் செழிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்தாலும், ஓர் சாதாரணக் குடிமகன் எப்படி வாழ்வாரோ, அதேபோல் தன் வாழ்க்கை இயற்கை சூழலுடன் இணைந்த ஒன்று என்பதை விளக்கியது இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ஏற்ற தலைவர் தான் என்பதை நிரூபித்தார். அந்த மாநாட்டில் இந்திராகாந்தி,

“பூமியின் மீதான எனது நேசம் பூமிக்கானது மட்டுமல்ல, மனிதக் குலத்தின் அற்புதமான உறைவிடம் என்பதாலேயே. அது மட்டுமல்ல, தன் சக மனிதர்களை மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தனது உறவாகப் பார்க்க முடியாது போனால், நமது நாகரீகம் பொருளற்றதாகப் போய்விடும்” என்று அந்த மாநாட்டில் கவித்துவத்துடன் பேசியது அவருக்கு இயற்கையின்மேல் உள்ள ஆழ்ந்த புரிதலை விளக்கியது. 

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எம் நாட்டுக் கல்வெட்டு ஒரு செய்தியைக் கூறுகின்றது. மக்களைப் பாதுகாப்பதும், தவறு செய்பவர்களைத் தண்டிப்பது மட்டுமல்ல ஒரு ஆட்சியாளரின் கடமை, கானகங்களையும், கானுயிர்களையும் பாதுகாப்பதும் தன் தலையாய கடமையாகக் கொண்டு ஆண்ட வரலாறு எங்களுக்கு இருக்கின்றது. எம் நாட்டில் அசோகர் காடுகளையும், கானக உயிர்களையும் பாதுகாக்கச் சட்டமியற்றிப் பாதுகாத்தது வரலாறு” என்று கூறி இந்தியாவின் மனிதத்துவத்தைத் தாண்டிய செயல்பாடுகளைப் படம்பிடித்துக் காண்பித்து உலகத்தலைவர்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார். 

அடுத்து வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி விளக்கும்போது, ‘நாங்களும் ஏன் மேற்கத்திய நாட்டு வளர்ச்சிப் பாதையைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்‘ என்பதை மிகத் தெளிவாக அந்த மாநாட்டில் விளக்கினார். மேற்கத்திய வளர்ச்சிப்பாதையில் உள்ள சிக்கல்களையும், மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி உலக நாடுகளில் இயற்கை வளங்களைப் பெருமளவு சுரண்டித் தங்களை வளமாக்கிக்கொண்டு அடிமைப்பட்ட சமுதாயங்கள் சுதந்திரம் அடைந்து முன்னேறத் துடித்து மேற்கத்திய அணுகுமுறையைப் பின்பற்றிச் செயல்படும்போது, மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறது ‘இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்‘ என்று. இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று எடுத்துக்காட்டினார். 

அதுமட்டுமல்ல நாங்கள் மேற்கத்திய முறை வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்குக் காரணம், அதில் உள்ள சிக்கல்கள் புரியாமல் இல்லை, எங்களிடம் அந்தப் புரிதலை எங்கள் நாட்டு உபநிடதங்களே கூறுகின்றன, ஆனால் எங்கள் சமூகம் வறுமையின் கோரப்பிடியில் இருக்கிறது, மேற்கத்திய நாடுகள் எங்களைச் சுரண்டியதால், இதிலிருந்து ஒரு குறுகிய காலத்திற்குள் எங்கள் நாட்டு மக்களின் ஏழ்மைக்கு விடுதலை கொடுக்கவேண்டும் என்று நாங்கள் எண்ணுகின்றோம், எனவேதான் வேறு வழியின்றி உடனடி நிவாரணம் வேண்டி மேற்கத்திய முறையிலான வளர்ச்சிப்பாதையைப் பின்பற்றுகிறோம் என்று கூறி மேற்கத்திய நாடுகளின் ஆணவத்திற்கு ஒரு சாட்டையடி கொடுத்தது நம்மை வியக்க வைக்கிறது. 

உலகின் ஆசைக்குத் தீனிபோட இயற்கை வளம் இல்லை என்பதைச் சொன்ன நாடு இந்தியாதான். இருந்தபோதிலும் எங்கள் சூழல் எங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது. இதற்கும் மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என்பதை எடுத்துரைத்தார் அந்த மாநாட்டில். இந்தக் கருத்தை அந்த ஐ.நா நிகழ்வில் கூறுகின்றபோது அறிவியல்பூர்வமாக இயற்கை சூழலைச் சுரண்டச் சுரண்ட வறுமை பெருகும் என்று சூழலியலுக்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பினை எடுத்துவைத்து அறிஞர்கள் மத்தியிலும், உலகத் தலைவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார். 

அந்த மாநாட்டில் ஒரு நாட்டின் தலைவராகவும், அறிவுஜீவியாகவும், மனிதக்குல புரவலராகவும் அவர் பார்க்கப்பட்டார். அடுத்து இந்தியாவின் சூழலுக்கு யார் காரணம் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காலனியாதிக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டு உலகைச் சுரண்டிய நாடுகளை அச்சமின்றிச் சுட்டிக்காட்டியது, அவர் தலைமைத்துவம் எவ்வளவு உறுதியானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

அடுத்த நிலையில் இந்தியாவிற்கு இருக்கும் உலகப் பார்வையையும், ஞானப் பின்னணியையும் எடுத்து வைத்து விவாதித்து மிகப்பெரிய பெயரை அவருக்கு உலகத்தலைவர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. அதே நேரத்தில் நாங்கள் ஏன் மேற்கத்தியமயத்தையும், நவீனமயத்தையும் தவிர்க்க இயலாத சூழலில், எங்கள் வறுமையைப் போக்க உடனடி நிவாரணம் தேடிச் செய்கின்றோம் என்றால் எம் நாட்டு மக்கள் எவ்வளவு நாள் ஏழ்மையில் பொறுமையாக இருப்பார்கள் என்பதை எண்ணி அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று வாதிட்டது ஏழ்மையின்மீதும், ஏழ்மையால் மக்கள் படும் அவதியும் அவரை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை அந்த மன்றத்தில் பேசும்போது வெளிப்படுத்தியது அவர் ஏழைகள் மீது கொண்டிருந்த பார்வையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. 

அப்படிப்பட்ட தலைமை மறக்கக்கூடியது அல்ல. அவரை நினைவு கூர்வது என்பது அவருக்குச் செய்யும் அஞ்சலி மட்டுமல்ல, அவர் கூறிய கருத்துகள் என்பது காலத்தைக் கடந்து மானுட வாழ்வு மலர உதவிடும் என்பதால் அவை அனைத்தும் என்றும் நினைவுகூரத் தக்கவைகள் என்பதால் அவரை நாம் மறக்காமல் நினைவுகூர வேண்டும்.