Wednesday 10 December 2014

சொற்சிலம்பம் 1 - பேனாவும் பெண்ணும்

 சிந்தனைச் சிடுக்குகளில்
அருகருகே உருக்கொண்டு
பொருள் மருவச் செய்கிறார்கள்
ஒன்று போல் ஒன்றெனப் பல
ஒற்றுமைகள் நெய்கிறார்கள்

ஆங்கில ஒலியில்
முன்னது ‘பெண்’
தமிழ் ஒலியில்
பின்னது ‘பெண்’

தமிழில்
பேனாவை ‘கோல்’ என்பர்
ஆங்கிலத்தில்
பெண்ணை ‘கே(ர்)ள்’ என்பர்

பேனா இட்ட மை
அறிவை மயக்கும்
பெண் இட்ட மை
ஆளை மயக்கும்

பேனாவோடு
பள்ளி சேர்ந்தால்
கல்வியின்பம்
பெண்ணோடு
பள்ளி சேர்ந்தால்
கலவியின்பம்

பேனா கல்வியால்
கருப்பெறம்
பெண் கலவியால்
கருப்பெறும்

கரு வளர்ந்தால்
இருக்குமே பிரவசம்
பேனாவின் பிரசவம்
வெளியீடு
பெண்ணின் வெளியீடு
பிரசவம்

வாய்மை கொள்வது
பேனாவுக்கும்
தாய்மை கொள்வது
பெண்ணுக்கும்
பெருமைப் பேறுகள்

பேனாவுக்குக் கூரழகு
பெண்ணுக்கு மாரழகு
மூடி(க்) கொண்டு காத்தல்
இருவருக்கும் வழக்கம்

பேனாவுக்கு
கூரில் சுரக்கும்
பெண்ணுக்கு
மாரில் சுரக்கும்

வாய்மை ‘நிப்’பில்
சுரந்தால்
சிறந்த நூலாகும்
தாய்மை ‘நிப்பில்’
சுரந்தால்
சிறந்த பாலாகும்

பேனாவும் பெண்ணும்
ஆண்களின் சட்டைப்பையை
அநேகம் விரும்புவர்
ஆண்கூட அப்படித்தான்
பேனாவையும் பெண்ணையும்
நெஞ்சிலே தாங்கியிருப்பான்

காதல் பாட்டுக்கு
பேனாவும் பெண்ணும்
கட்டாயம் வேண்டும்

பேனா காதலை
வாசகமாக்கும்
பெண் காதலை
யாசகமாக்குவாள்

பேனா பா முடிக்கும்
பெண் பூ முடிப்பாள்

பேனா
உதட்டில் தொட்டாலும்
பெண்
உதட்டில் தொட்டாலும்
சாயமாகும் ஜாக்கிரதை

வளைவு நெளிவுகள்
பெண்ணில் பார்க்கலாம்
பேனாவில் வார்க்கலாம்

புதுப்பேனா பளபளப்பு
புதுப் பெண் தளதளப்பு

பேனா வைத்த பொட்டு
புள்ளி
பெண் வைத்த புள்ளி
பொட்டு

பேனாவை பெண்ணை
பாங்காய்ப் பேணுதல்
ஏட்டுக்காரருக்கும்
வீட்டுக்காரருக்கும்
தலைக்கடமை
ஏனெனில்
பேனா அழுதால்
கரு ‘மை’ கசியும்
பெண் அழுதால்
பெருமை கசியும்

பேனா புத்தி
பெண் சத்தி
புத்தியின்றி
எவனுமில்லை
சத்தியின்றி
சிவனுமில்லை

பேனாக்களோடு
அலைபவர்
செய்தியாளர் என்றறிக
பெண்களோடு
அலைபவர்
செய்தியாவர் என்றறிக

பேனாவும் பெண்ணும்
சாம்ராஜ்யம் சரித்ததாக
சரித்திரத்தில் கதைகளுண்டு

பேனா
பெண்ணைப் பற்றி
எழுதினால்
பெண்ணியம்
பெண்
பேனாவைப் பற்றி
எழுதினால்
கண்ணியம்

பேனாவைத் தூற்றினும்
பெண்ணைத் தூற்றினும்
தேசம்தான்
துப்பற்றுப் போகும்

பேனா பிடித்த பெண்ணும்
பெண் பிடித்த பேனாவும்
அதிகாரம் பெறுவது
அகிலத்திற்கு
அவசியம் & அவசரம்

- தாண்டவக்கோன், திருப்பூர்
கிழக்கு வாசல் உதயம் அக்டோபர் 2012 இதழில்

துன்பமே ஆற்றலைத் தரும்

ஒரு நாள் காலை நேரம். ஓர் அவசர அலுவல் காரணமாக என் நெருங்கிய நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். வியாபாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கும் இளைஞர் அவர். என்னைப் பார்த்ததும் கடைவாசலுக்கு வந்து விட்டார். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், அலுவலகம் செல்வோரும் என்று கடைத்தெரு பரபரப்பாக இருந்தது. நண்பரிடம் செய்தி சொல்லப் போகும் தருணத்தில் கூட்ட நெரிசலில் முழி பிதுங்கியபடி நகரப்பேருந்து ஒன்று நகர்ந்தபடி எங்களைக் கடக்க முயன்றது.

பேருந்துக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் நண்பரைப் பார்த்து,
“சார்! நல்லா இருக்கிங்களா?” என்று கையசைத்தான்.

அவனைப் பார்த்ததும் முகம் மலர “அடடே நீயா! நல்லா இருக்கியா? பத்திரமா போயிட்டு வா!” என்று பதிலுக்குக் கையாட்டினார்.

அதுமட்டுமல்ல, பேருந்து கொஞ்சம் தூரம் போகும் வரை அந்தப் பக்கமே பார்த்திருந்துவிட்டு அப்புறம்தான், “ஹும், சொல்லுங்க!” என்றார் என்னைப் பார்த்து.

அவர் மனஓட்டத்தைக் கொஞ்சம் புரிந்துகொண்டு “யார் அந்தப் பையன்?” என்றேன்.

“வருங்காலத்தில் மிகப்பெரிய ஆளா வரப்போகிற அசகாயச் சூரன் சார் அவன்!” நண்பரின் அந்த அசத்தலான பதிலைக் கேட்டு நானும் கொஞ்சம் மிரண்டு போனேன்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க?”

“ஆமா சார்! ஒரு நாள் கடைக்குள் நுழைந்த இவன் நேரே எங்கிட்டே வந்தான். ‘சார்! ஒரு பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். உங்க கடை வாசலியே நின்னு வித்துட்டுப் பணத்தைக் கொடுத்திடறேன்!’ அப்படீன்னான். அது கடுமையான பனிக்காலம்! ‘ஓ! அல்வாவுக்கே அல்வாவா! அதிருக்கட்டும்! படிக்கிற பையன்தானே, நீ!’ என்றேன். ‘ஆமா சார்! ஏழாவது படிக்கிறேன் சார். வீட்ல அப்பா, அம்மா, தங்கச்சி, நாலு பேரு. ஆத்தங்கரையிலே குடியிருக்கோம். அம்மா வீட்டு வேலைக்குப் போகும். தங்கச்சி ரெண்டாங் கிளாஸ் படிக்குது’ என்றான். ‘அப்பா?’ என்றதும், ‘குடிச்சிட்டு வந்து அம்மாகிட்ட சண்டை போடறதும், அலங்கோலமா போதையில படுத்துத் தூங்குறதுந்தான் அப்பாவோட வேலை. அம்மா ரொம்பக் கஷ்டப்படுது சார்! அதுக்கு ஏதாவது உதவியா இருக்கணும் சார். பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். பணம் இல்லே சார். வித்துட்டுக் உடனே கொடுத்திடறேன் சார்’ அப்படீன்னான்!”

“அட! இந்தச் சின்ன வயசுல எப்படி ஒரு யோசனை பாருங்க!”

“உடனே அவன்கிட்டே பத்து காது கப்புக் கொடுக்கச் சொன்னேன். நாங்க விக்கிறது, ஒண்ணு அஞ்சு ரூபா. அதையே எங்கக் கடை வாசல்லேயே நின்னு பத்து ரூபா, பத்து ரூபான்னு கூவி, பத்தையும் ஒரு மணி நேரத்திலே வித்துட்டு, ‘இந்தாங்க சார்! உங்க அம்பது ரூபா பணம்’னு கொடுத்தான். அசந்து போயிட்டேன்! ‘எங்க அடக்க விலையிலே கொஞ்சம் லாபம் வச்சுக்கிட்டேன். ஒண்ணு நாலு ரூபாதான் ஆகுது. இந்தா மீதம் பத்து ரூபா’ன்னு நாப்பது ரூபாய் மட்டும் வாங்கிக்கிட்டேன். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கல. அப்பைக்கப்போ வருவான். எதிர்காலத்திலே இவன் பெரிய ஆளா வரப்போறான்!”
நண்பர் மனம் நெகிழ்ந்து சொன்னதைக்கேட்டு எனக்குத் தோன்றியது இதுதான்!

‘அளவற்ற துன்பம், அளப்பரிய ஆற்றலைப் பரிசாகத் தரும் போலும்!’

- உத்தமசோழன்
ஜூன் 2014 'என் வாசலின் வழியே' பகுதியில் வெளிவந்தது

Wednesday 9 July 2014

‘கைப்பிடிக்குள் சர்க்கரை’



செங்கல் சூளைத் தொழிலாளியாக இருந்த அட்டைப்பட நாயகனுக்கு பத்து ஆண்டுகளாக பார்வை இல்லை. அது முதல் தனது கணவனை பராமரித்து வருபவர், இவர் மனைவி இந்துமதி.

‘இன்னைக்கு கண்டிப்பா தாடி மீசை எடுத்தாகணும்-!’ என்று பிடிவாதம் பிடித்த கணவனின் கரத்தைப் பிடித்து சலூனுக்கு அழைத்து வருகையில் எடுக்கப்படம் புகைப்படம் இது.

அவர்களைக் குறுக்கிட்டு உரையாடியபோது,

“அவரு பேரு என்னம்மா?”

“சர்க்கரை!” என்றார் அவரே.

“நெசத்துலயும் உன்கிட்ட சர்க்கரையா இருக்காராம்மா இவரு?”

“எங்க? வெயில் தணிஞ்சு போகலாம்னா, இந்த 3 மணி வெயில்ல போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறாரு. இப்படித்தான்!” என்று சிரித்தார்.

தொடர்ந்து ஒரு குழந்தையைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப் போல், தன் கணவனை அழைத்துச் சென்றார், அந்தத் தாய்!

Wednesday 29 January 2014

தீயும், தியாகமும் | என் வாசலின் வழியே!

28.12.2013 சனிக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் பெங்களூரு நாந்தேட் எக்ஸ்பிரஸ், பி&1 குளிர்சாதனப் பெட்டியில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இது நடந்தது ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் அருகே.

தீப்பிடித்த அந்த பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள், நிலைமை உணர்ந்து உயிர் தப்பிக்க யத்தனிப்பதற்குள்ளாகவே அந்தக் கொடுமைக்காரத் தீ, 26 மனித உயிர்களை அசுர வேகத்தில் தின்று தீர்த்துவிட்டது. அந்த இரக்கமற்ற தீ தின்று முடித்தவர்களில், ஏதுமறியாத இரண்டு குழந்தைகளும் அடக்கம்.

போகிற போக்கில் 2013ஆம் ஆண்டு, நமக்குக் கொடுத்துவிட்டுப் போன இந்தத் துயரச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், செய்தித்தாள்களில் படித்தபோதும் நம் நெஞ்சமெல்லாம் பதறித் துடித்தது.

இத்தனைத் துயரத்திலும் நாம் கட்டியணைத்துப் பாராட்ட வேண்டிய ஒருவர் உண்டென்றால், அவர் அந்த விரைவு வண்டியின் ஓட்டுநர். தீ விபத்து ஏற்பட்டது அறிந்ததும் உடனடியாக ‘கொத செருவூ’ ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். உடனே தீப்பிடித்த பெட்டி, மற்ற பெட்டிகளிடமிருந்து துண்டிக்கப்பட வழிவகுத்தார். இல்லையெனில், மேலும் பல நூறு உயிர்கள் பலியாகியிருக்கும்.

அவரைவிட பாராட்ட வார்த்தைகளே கிடைக்காத தீரம் மிக்க தியாகிகள் இருவர் அந்தத் துயர நிகழ்ச்சியில் போராடியிருக்கிறார்கள்.

அந்தத் தீ விபத்தில் தனது மனைவி, மாமனார் இருவரையும் பறிகொடுத்த நிலையிலும், உடன் வந்த பயணிகள் 20 பேரைத் தனது உயிரைத் துச்சமெனக் கருதித் தீயுடன் போராடி மீட்டிருக்கிறார் ஒருவர். அவரது பெயர் சரண். பெங்களூரைச் சேர்ந்தவர்.

அதேபோல், இன்னொருவர் கழிவறைக் கதவை உடைத்து தீயின் வாயிலிருந்து மூன்று உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் இவரது மனைவியும், மாமனாரும் அதே தீ விபத்தில் பலியாகி விட்டனர். அவரது பெயர் சரத்.

சொந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மற்றவர் உயிர்களைக் காப்பாற்றிய இந்த வீரத் தியாகிகளை என்ன சொல்லி எப்படிப் பாராட்டலாம்? பாராட்டுவதோடு நின்றுவிடலாமா? அல்லது அவர்களைப் போல் நாம் ஒவ்வொருவரும் மாற முயற்சிக்கலாமா? மாறுவோம்!

நல்ல மக்கள் வாழும் நாடுதானே உண்மையான குடியரசாக இருக்க முடியும்!

 -  உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2014 இதழில்