Wednesday 29 January 2014

தீயும், தியாகமும் | என் வாசலின் வழியே!

28.12.2013 சனிக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் பெங்களூரு நாந்தேட் எக்ஸ்பிரஸ், பி&1 குளிர்சாதனப் பெட்டியில் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. இது நடந்தது ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தின் ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் அருகே.

தீப்பிடித்த அந்த பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள், நிலைமை உணர்ந்து உயிர் தப்பிக்க யத்தனிப்பதற்குள்ளாகவே அந்தக் கொடுமைக்காரத் தீ, 26 மனித உயிர்களை அசுர வேகத்தில் தின்று தீர்த்துவிட்டது. அந்த இரக்கமற்ற தீ தின்று முடித்தவர்களில், ஏதுமறியாத இரண்டு குழந்தைகளும் அடக்கம்.

போகிற போக்கில் 2013ஆம் ஆண்டு, நமக்குக் கொடுத்துவிட்டுப் போன இந்தத் துயரச் செய்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், செய்தித்தாள்களில் படித்தபோதும் நம் நெஞ்சமெல்லாம் பதறித் துடித்தது.

இத்தனைத் துயரத்திலும் நாம் கட்டியணைத்துப் பாராட்ட வேண்டிய ஒருவர் உண்டென்றால், அவர் அந்த விரைவு வண்டியின் ஓட்டுநர். தீ விபத்து ஏற்பட்டது அறிந்ததும் உடனடியாக ‘கொத செருவூ’ ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். உடனே தீப்பிடித்த பெட்டி, மற்ற பெட்டிகளிடமிருந்து துண்டிக்கப்பட வழிவகுத்தார். இல்லையெனில், மேலும் பல நூறு உயிர்கள் பலியாகியிருக்கும்.

அவரைவிட பாராட்ட வார்த்தைகளே கிடைக்காத தீரம் மிக்க தியாகிகள் இருவர் அந்தத் துயர நிகழ்ச்சியில் போராடியிருக்கிறார்கள்.

அந்தத் தீ விபத்தில் தனது மனைவி, மாமனார் இருவரையும் பறிகொடுத்த நிலையிலும், உடன் வந்த பயணிகள் 20 பேரைத் தனது உயிரைத் துச்சமெனக் கருதித் தீயுடன் போராடி மீட்டிருக்கிறார் ஒருவர். அவரது பெயர் சரண். பெங்களூரைச் சேர்ந்தவர்.

அதேபோல், இன்னொருவர் கழிவறைக் கதவை உடைத்து தீயின் வாயிலிருந்து மூன்று உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் இவரது மனைவியும், மாமனாரும் அதே தீ விபத்தில் பலியாகி விட்டனர். அவரது பெயர் சரத்.

சொந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மற்றவர் உயிர்களைக் காப்பாற்றிய இந்த வீரத் தியாகிகளை என்ன சொல்லி எப்படிப் பாராட்டலாம்? பாராட்டுவதோடு நின்றுவிடலாமா? அல்லது அவர்களைப் போல் நாம் ஒவ்வொருவரும் மாற முயற்சிக்கலாமா? மாறுவோம்!

நல்ல மக்கள் வாழும் நாடுதானே உண்மையான குடியரசாக இருக்க முடியும்!

 -  உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2014 இதழில்