Sunday 10 March 2013

தலையணைப் புத்தகம்


நல்ல தமிழில் எழுத வேண்டுமானால் பாரதியைப் படியுங்கள் என்பது போல ஜப்பானிய மொழிநடைக்கு முன்னுதாரணமாக, 'ஸே ஷோனகான்' என்ற பெண் எழுத்தாளரைச் சொல்கிறார்கள்.

ஸே ஷோனகான் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானிய மகாராணியிடம் தாதியாக வேலை பார்த்தவர். பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும், அழகும் மிகுந்தவர். அவருடைய வேலை, மாட்சிமை தாங்கிய மகாராணியிடம் சுவையாகப் பேசி, அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். அந்தக் காலத்தில் காகிதம் விலை உயர்ந்த பண்டமாக இருந்தது. ஒரு நாள் மகாராணிக்கு ஒரு பெரிய காகிதக் கட்டு ஒன்றினை சீனாவிலிருந்து வரவழைத்து பரிசாகத் தருகிறார், சேனாதிபதி.

"இதை வைத்து நான் என்ன செய்யட்டும்..?" என்று கேட்கிறார், புன்சிரிப்புடன் மகாராணி, ஷோனகானிடம்.

"என்னிடம் கொடுங்கள். அதை வைத்து நான் ஒரு தலையணை செய்கிறேன்" என்கிறார் அவர்.

தலையணை என்றால் நிஜமான தலையணை அல்ல. வாழ்க்கையில் தான் கண்டு, கேட்டு ரசித்த நிகழ்வுகளை சின்னஞ்சிறுக் குறிப்புகளாக எழுதி ஒரு தலையணை அளவு புத்தகமாக்கி, மகாராணியிடம் சமர்ப்பிக்கிறார். அதைப் படித்து மகாராணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒரு மரப்பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அதற்குப் பின் ஷோனகான் ஏதாவது எழுதினாரா? அவர் என்ன ஆனார்? என்பது பற்றியெல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் ஏதுமில்லை.

ஆனால், ஷோனகான் எழுதிய தலையணைப் புத்தகம் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டு. இன்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த இலக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. ஜப்பானிய மொழி நடைக்கு பள்ளிக் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய அற்புதமான வழிகாட்டியாகத் திகழ்கிறது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சுவையான சம்பவங்கள், வித்தியாசமான பார்வையில் கிடைத்த நிகழ்வுகள், சின்னச் சின்ன அனுபவங்கள் எவ்வளவோ இருக்கும்.

ஷோனகான் ஒரு தலையணைப் புத்தகம் தந்தார்.

என்னிடம் இருப்பதோ, ஒரு கைக்குட்டை. மனசு என்கிற மடிக்கப்பட்ட அந்தக் கைக்குட்டையைப் பிரித்தால் வாழ்க்கை விரிகிறது.

நட்சத்திரங்களும், மேகத்துணுக்குகளும், மழைத் துளிகளுமாய் சின்னச் சின்னக் கதைகள். இனிமேல் உங்களுக்காக.

கோபாலி 
'கிழக்கு வாசல் உதயம்'
பிப்ரவரி இதழில் 

நிரம்பி வழியும் காலிக்கோப்பை


தேநீரை ஊற்றும்போது மட்டுமல்ல; சில சமயம் காலியாக இருக்கும்போதும் கோப்பை நிரம்பி வழிகிறது. கோப்பையில் வெறுமையும் நிரம்பி வழிகிறது.

தேநீரோ, வெறுமையோ, கோப்பை நிரம்பி வழிவதைக் கண்டுகொண்டால், தேநீரைப் போல வெறுமையும் இனிக்கும்! வாழ்க்கையும் இனிக்கும்!

நிரம்பி வழிவதான உணர்வு இருந்தால் போதும்.

அப்படியான உணர்வில் எழுதப்பட்ட இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை உங்கள் ரசனை எனும் கோப்பையில் ஊற்றுகிறேன்.

சில சமயம் தேநீர்! சில சமயம் வெறுமை! கோப்பை நிரம்புவது நிற்பதில்லை!

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' இதழில்