Monday 26 September 2016

யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்!

ன்று காலை ஒன்பது மணியிருக்கும். வெள்ளை வண்ண ஸ்கூட்டரில் ஏதோ வெள்ளைக் குதிரை மீதமர்ந்து பயணிக்கும் பரவசத்தோடு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அதிகச் சேதத்தைச் சந்திக்காத சாலை அது. அதனால் வாகனங்கள் ஒவ்வொன்றும் ‘பாயும் புலிகளாக’ பாய்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு பைக் என்னை முந்திக்கொண்டு சென்றது. அந்தப் பைக்கில் மொத்தக் குடும்பமும் அமர்ந்திருந்தது. கணவன் மனைவி இருவருமே பெருத்த உடம்பு. இரண்டு பிள்ளைகள். அவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெருக்கியடித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். முன்னால் அமர்ந்திருந்த பிள்ளை கையைக் குறுக்கே நெடுக்கே நீட்டினாலே பைக் ஓட்டுபவர் தடுமாறிப் போவார். ஆனாலும் அவர் வேகமாகவே போய்க்கொண்டிருந்தார். ‘ஆபத்தை மடியிலே கட்டிக்கிட்டு போகிற மாதிரி இப்படிப் போகணுமா’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘அதெல்லாம் அவங்களுக்குத் தெரியும். நீ வண்டியை ஒழுங்கா ஓட்டிக்கிட்டுப் போ! அது போதும்!’ என் புத்தி என்னை எச்சரித்தது.
எங்களைத் தாண்டிக் கொண்டு ஒரு தனியார் பேருந்து முன்னால் பறந்தது. ‘ஏதோ இவங்க போறதுக்காக மட்டுமே ரோடு போட்ட மாதிரியில்ல பறக்கிறாங்க!’ என்று எரிச்சலோடு முணுமுணுத்துக்கொண்டேன்.

அந்த நேரத்தில் முன்னால் குடும்பத்துடன் போய்க்கொண்டிருந்த பைக் பெருத்த அலறலுடன் கீழே சாய்ந்தது. ஓட்டியவர் ஒரு பக்கம், பைக் ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம், அந்த அம்மா ஒரு பக்கம் எனச் சாலையில் சிதறி விழுந்து வலி தாங்க முடியாமல் அலறினர். பதற்றமடைந்த நான் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் ஓடிப்போய்ப் பிள்ளைகளைத் தூக்கி விட்டேன். அதற்குள் எதிரும், புதிருமாகப் பைக்குகளில் வந்தவர்கள் ஓடிவந்து அவரையும், அந்த அம்மாவையும் தூக்கிவிட்டுக் கைகால்களைத் தடவிக் கொடுத்தனர். நல்லவேளை! சின்னஞ்சிறு சிராய்ப்புகளைத் தவிரப் பெருத்த காயம் ஏதும் ஏற்படவில்லை.

என்ன நடந்தது? உடம்பு முழுக்க வெடவெடவென நடுங்க பைக் ஓட்டிய அந்தக் குடும்பத் தலைவர் குரல் நடுங்க அச்சம் மாறாமல் சொன்னார். “இப்போ போச்சே.. அந்தப் பஸ்ஸின் ஜன்னல் வழியே எதையோ தின்னுட்டு காலியான ‘பிளாஸ்டிக் கேரி பேக்கை’ யாரோ தூக்கி வெளியே வீசியிருக்காங்க. அது பறந்து வந்து பின்னால போய்க்கொண்டிருந்த என் முகத்தில படாருன்னு மூடிடுச்சு. நான் தடுமாறிப் பைக்கைக் கீழே விட்டுட்டேன். நல்லவேளை! எங்க பின்னாடி அந்தப் பஸ் மாதிரியே வேற பஸ்ஸோ, லாரியோ, வேகமா வந்திருந்தா ஒட்டுமொத்தக் குடும்பத்தோட மொத்தமா நாங்க போய்ச் சேர்ந்திருப்போம்” நிம்மதி பெருமூச்சு விட்டார், அந்தக் குடும்பத் தலைவர்.

பேருந்திலிருந்து கேரி பேக்கை வீசியெறிந்தவர், அந்தப் பிளாஸ்டிக் பையால் பின்னால் பைக்கில் வருபவருக்கு இப்படி ஓர் ஆபத்து ஏற்படுத்தும் என்று யோசித்திருப்பாரா? நம்மில் பலர் எதைப் பற்றியும் சரிவர யோசிக்காததால்தானே விதவிதமான சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறோம். கையில் இருந்த காலிப் பையைத் தூக்கி வெளியே போடவேண்டும், அவருக்கு வேண்டியது அவ்வளவுதான்! யோசித்திருந்தால் வீசியிருக்கவே மாட்டார்.

யோசிப்போம்!

- உத்தமசோழன்
கிழக்கு வாசல் உதயம் ஜனவரி 2016 இதழில் வெளிவந்த 'என் வாசலின் வழியே' பகுதியில் வந்த செய்தி