Thursday 26 December 2013

கடவுள் விட்ட வழி

பள்ளிக்கூடத்தில் ஏழாம்  வகுப்பு ‘பி’ பிரிவு. புகைப்படத்தில் முழங்கை வரை தொங்கும் தொளதொளா  சட்டையும், முழங்காலுக்கு கீழேயும் நீளும் அரை டிராயருமாய்க் காட்சியளிக்கும் என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் எங்கள் ஊர் டெய்லர்தான்.

எனது வகுப்பறையில்  ஏனைய  மாணவர்கள் கச்சிதமாக உடம்போடு பொருந்தும் சட்டை டிராயருடன் காட்சியளித்தபோது  என்னை மட்டும் ஒரு கேலிச்சித்திரமாக ஆக்கிவிட்டிருந்தார் எங்கள் ஆஸ்தான டெய்லர்.

அப்பாவே ஒருமுறை தாங்கிக் கொள்ள முடியாமல் கேட்டே விட்டார்.

“ரொம்ப லூசா தச்சிட்டீங்க போலிருக்கே!”

“வளர்ற பையன் தானே சார்!”

'என்னது! அந்த சட்டை டிராயரை நான் வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன!' எனக்கு கோபம் கோபமாக வந்தது!

டெய்லரின் சுபாவம் விசித்திரமாக இருக்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது  என்று பார்க்க விரும்பாததுபோல் குனிந்து தைத்துக் கொண்டே இருப்பார்!

தெரு வழியே சர்க்கஸ் வண்டி போகும். கல்யாண ஊர்வலம் போகும். பட்டாசு அதிரும். தாரைத் தப்பட்டையுமாய் இறுதி ஊர்வலமும் போகும். ம்கூம்! டெய்லர் நிமிர்ந்தே பார்க்க மாட்டார்!

சாயங்கால வேளை களில் அவர் மனைவியும், பெண்களும் தட்டு நிறைய காராசேவு வாங்கி வைத்துக் கொண்டு கூஜா நிறைய காபி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டது. எனக்கு ஒரு வகையில் சந்தோஷம். அப்பாடா! இந்த டெய்லரிடமிருந்து விடுதலை!

ஒரு வகையில் வருத்தம். குனிந்தபடி தைக்கும் அந்த டெய்லரையும், காரா சேவு சாப்பிடும் அவர் பெண்களையும் காலம் என்ன செய்திருக்கும்?

- கோபாலி
'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்.

Wednesday 25 December 2013

யாருக்குச் சொந்தம்?

அன்று காலை எட்டு மணி இருக்கும். என் வீட்டு மாடி அறைக்கு ஒரு புத்தகம் தேடுவதற்காக படியேறினேன்.

இரண்டு மூன்று படிகள் ஏறுவதற்குள்ளாகவே மாடிப்படியோரம் நின்ற வளைந்த தென்னை மரத்தில் உட்காந்திருந்த காகம் ஒன்று, ஏதோ உயிர் போகிற மாதிரி “கா, கா!” என்று கத்தியது. உடனே அக்கம் பக்கத்து மரங்களில் உட்காந்திருந்த அதன் சாதி சனங்களான பல காகங்கள், ‘இதோ வந்துட்டேன், வந்துட்டேன்!’ என்பது போல் “கா, கா!” என்று கத்திக்கொண்டே தென்னை மட்டைகளிலும், மாமரக் கிளைகளிலும் அமர்வதும், பறப்பதுமாக என்னைச் சுற்றியே வட்டமடிக்கின்றன.

‘என்ன இது! நம்ம வீட்டு மாடியிலே நம்மையே ஏறக்கூடாது என்பது போல் கத்துதுங்களே!’ என்று எரிச்சலோடு ‘ச்சூ, ச்சூ!’ என்று மாடி அறைக்குள் நுழைந்தேன். காக்கைச் சத்தமும் ஓய்ந்தது.
அறைக்குள்ளிருந்து  வெளியே வந்ததும், மீண்டும் ‘கா, கா!’ என்ற கூச்சல். அதிலும் முதன் முதலாக கத்த ஆரம்பித்த காகம் தான் ‘எங்கடா இங்கே வந்தே!’ என்பது போல் விடாமல் கரைவதும், மேலே எழும்பி என் தலையை கொத்த வருவதுமாக பயமுறுத்தியது.

கீழே கிடந்த நீளமான குச்சி ஒன்றை எடுத்து ‘கிட்டே வந்தே, தொலைச்சிடுவேன்!’ என்று பயமுறுத்தினேன். ம்கூம்! அது பயப்படுவதாக தெரியவில்லை.

“இதோ பார்! இந்த வீடு, நான் கட்டியது. நீ உக்காந்து கத்துறியே, அது நான் வச்சு ஆளாக்கிய எனக்குச் சொந்தமான தென்னை. அதிலே உக்காந்துகிட்டு என்னையே வரக்கூடாதுன்னு ஆர்ப்பாட்டம் பண்றியா?” என்று மிரட்டினேன்.
அது மசிவதாக இல்லை. ‘கா, கா’ என்று என்னைப் பார்த்தவாறே பறந்து, பறந்து கத்தியது, அந்தப் பொல்லாத காகம்.

‘என்ன இது! புதுத் தொந்தரவா இருக்கே!’ என்று எரிச்சல்பட்டப்படியே கீழே இறங்கினேன்.

அப்போதுதான் என் இல்லத் தலைவி சொன்னார்.

“ஏங்க நம்ப மாடிப்படி தென்னையிலே காக்கா ஒண்ணு கூடு கட்டியிருக்குங்க. இனிமே அது குஞ்சு பொறிச்சு, அதுங்க பறக்குற வரைக்கும் யாரையும் அண்டவிடாதுங்க. பாத்து ஜாக்ரதையா போயிட்டு வாங்க!”

“அப்படியா! இந்த வீடு, மரம் எல்லாம் நம்மதுதான்னு நாம வச்சிருக்கிற பட்டா, சிட்டா, புக், இதெல்லாம இந்தக் காக்காக்கிட்டே செல்லாதா!”

“அதுகிட்டேதான் கேக்கணும்!” என் மனைவி சிரித்தார்.

இந்த வீடும், மரங்களும் உண்மையில் யாருக்குதான் சொந்தம்?

- 'கிழக்கு வாசல் உதயம்' ஆகஸ்ட் 2013 இதழில்