Tuesday 15 August 2017

இப்படியும் ஒரு மகனா!

இன்றைய இந்திய இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பம் எது? அவர்களின் எதிர்காலக் கனவுகள் என்ன? ஆய்வு செய்தால்.. ஆய்வு எதற்கு? உள்ளங்கை நெல்லிக்கனி எனப் புலப்படும் உண்மை இதுதான்.
மருத்துவமோ, பொறியியலோ படிக்க வேண்டும். படித்தபின் பெரிய நிறுவனம் ஒன்றில் கை நிறைய ஊதியம் வாங்க வேண்டும். அதில் தவணைக்கு ஒரு மகிழுந்து, அதன்பின் ஒரு புதுவீடு. ஞாயிற்றுக்கிழமை இன்பச் சுற்றுலா, மது, மேற்படி.. மேற்படி, அதற்குப் பிறகு அழகான, தன்னைப்போல் கை நிறைய ஊதியம் பெறும் பெண்ணோடு திருமணம். பின்பு நிறுவனச் செலவில் வெளிநாட்டு பயணம். அதைப் பயன்படுத்தி வெளிநாட்டிலேயே வேலை, அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கிவிடவேண்டும்.
இவர்களைப் பெற்ற தாய் தந்தையர்களின் சிந்தனையும் மேலே சொன்னவற்றையேதான் சுற்றிச் சுழல்கிறது. மகனுக்கு ஒரு வேலை, வேலை கிடைத்தபின் திருமணம், பேரன், பேத்தி, மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி, அங்கு அவன் வாங்கும் சம்பளத்தின் பெருமை. அதன்பின் கவனிக்க ஆளின்றி முதியோர் இல்லம்.

பாரதி பாடியது போல் 'தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி வாழ்க்கையைக் கழிக்கும் வேடிக்கை மனிதர்கள்'தான் இவர்கள். இதுதான் வாழ்வா? 'இல்லை' என வாழ்ந்து காட்டிய காணக் கிடைக்காத ஒரு மகனும், தந்தையும் இருந்தார்கள். அவர்கள் யார்?

இந்திய விடுதலை வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் மற்றும் அவர்களுடைய புரட்சி இயக்கத் தோழர்கள். விடுதலைப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதிலும், விடுதலை நாளை நெருங்கி வர வைத்ததிலும் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அந்த இளைஞர் திருக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒருவர் மகாவீர் சிங்.

1926 முதல் 1930 வரை வட இந்தியாவில் புரட்சி இயக்கங்கள் தீவிரமாகப் பணியாற்றின. குறிப்பாகச் சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு சங்கம்’ என்ற புரட்சி அமைப்பு இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்து வந்தது. பகத்சிங், சுகதேவ், இராஜகுரு, இராமச்சந்திர பிஸ்மில், சிவ வர்மா, ஷேர் ஜங் எனப் பல இளைஞர்கள் இந்தப் புரட்சி அமைப்பில் சேர்ந்து விடுதலைக்காக உழைத்து வந்தனர்.

மகாவீர் சிங். வயது 23க்குள். கடல் கடந்து வந்த வெள்ளையர்கள், பரந்து விரிந்து கிடந்த பாரத நாட்டை அடிமையாக்கி ஆண்டு வந்தது, அந்த இளைஞனின் மனதைப் பெரிதும் உறுத்தியது. பருவ வயது ஆசைகள் எதுவும் அவனுக்குள் முளைத்து எழவில்லை. சுதந்திர வெறியே அவனுக்குள் பொங்கி எழுந்தது. பெண்களின் மை பூசிய விழிகள் அவனைக் கவர்ந்து இழுக்கவில்லை. பாரதத் தாயின் கைகளில் பூட்டியிருக்கும் விலங்குகளை உடைக்கவே அவனது உள்ளம் துடித்தது.
ஆனால், அதை அறியாத அவனது தந்தையும், குடும்பத்தினரும் அவனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் திருமணம் என்ற இனிப்பு, மகாவீர் சிங்கிற்கு மட்டும் கசந்தது. மணவாழ்வு தன் இலட்சியத்திற்கு இடையூறாக இருக்கும் என்று அவன் எண்ணினான். திருமண ஏற்பாட்டை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று மகாவீர் சிங் சிந்தித்தபோது அவனுக்குத் தோன்றிய வழி தனது தந்தை தேவி சிங்கிடம் பேசிப் பார்க்கலாம் என்பதுதான்.

ஆனால், எந்தத் தந்தையும் தனது மகனுக்கு நல்ல மணவாழ்வை அமைத்துத்தர விரும்புவாரே தவிர மரணத்தையும், சொல்லி மாளாத துயரத்தையும் தர விரும்பமாட்டார் என்ற எண்ணம், தந்தையிடம் பேசமுடியாமல் மகாவீர் சிங்கைத் தடுத்தது.

இருப்பினும் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டு தந்தை தேவி சிங் முன் சென்று நின்றான் மகாவீர் சிங். தயக்கத்துடன் வந்து நின்று மகனிடம், "என்ன மகனே! பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறது அல்லவா?" என்றார் தேவி சிங்.

தனது தயக்கத்தை உதறியெறிந்த மகாவீர் சிங், "அப்பா, எனக்கு மணவாழ்வில் விருப்பமில்லை. நமது தாய்நாடு அடிமைப்பட்டு, அல்லல்பட்டுக் கிடக்கும்போது நான் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பம் துய்க்க விரும்பவில்லை. புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு என் வாழ்நாள் முழுவதையும் விடுதலைக்கான பணியில் அர்ப்பணிக்கவே விரும்புகிறேன். எனவே, தயவுசெய்து எனக்குத் திருமண ஏற்பாடு வேண்டாம்!” என்றான்.

மகன் சொன்னதைக் கேட்ட தந்தை கொதித்து எழுந்திருக்க வேண்டுமல்லவா! வார்த்தைகளை அள்ளி வீசியிருக்க வேண்டுமல்லவா! மகனை 'ஓடிவிடு' என்று துரத்தியிருக்கவேண்டுமல்லவா? ஆனால், தேவி சிங் அப்படி ஏதும் செய்யவில்லை. ஆடாமல், அசையாமல் கொஞ்ச நேரம் 'திருமணம் வேண்டாம்' என்று சொன்ன மகனையே பார்த்தபடி சிலைபோல் நின்றார். சில நொடி நேரம்தான் அந்த அமைதி. அதன்பின் நிதானமாகச் சொன்னார்.

"மகனே, நாடு இன்று இருக்கும் நிலையில் நல்லதொரு முடிவைத்தான் எடுத்திருக்கிறாய். மணவாழ்வை எண்ணாமல், நாட்டைப் பற்றி எண்ணும் உன்னைப் பெற்றதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். போய் வா! நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்" என்று மகிழ்ச்சியுடன் மகனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் தேவி சிங்.

தந்தையின் நெஞ்சார்ந்த ஆசியுடன் ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு சங்கத்தில்’ இணைந்த மகாவீர் சிங் அதன் புரட்சி நடவடிக்கைகள் அனைத்திலும் முதல் ஆளாக முன் நின்றார். சாண்டர்ஸ் கொலை, டில்லி மத்தியச் சட்டசபை குண்டு வெடிப்பு, ககோரி இரயில் கொள்ளை என அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் மகாவீர் சிங் முன்னின்றார். புரட்சி இயக்கத்தை ஒடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் பலனாகப் பல புரட்சி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான சிலர் இயக்கத்தைப் பற்றி சொல்லவேண்டிய நெருக்கடிக்கு ஆளாயினர்.

இந்த நிலையில் தேவி சிங் தன் மகனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், "மகனே, உன்னைப் பெற்ற நான் பாக்கியசாலி, நீ செல்லும் பாதை மிகவும் கடினமானது. எனினும் நீ முன்னோக்கி முன்னேறியபடியே செல். எந்த நிலையிலும் இயக்கத்திற்குத் துரோகம் செய்யாதே. இந்தக் கிழட்டுத் தந்தையின் பெயரைக் காப்பாற்று!" என்று எழுதியிருந்தார்.

மரணத் தேவதை தன் மகனை எந்த நேரமும் காவு கொள்ளலாம் என்ற நிலையிலும், அந்தத் தந்தை அனுப்பிய கடிதம் இது! தந்தையின் கடிதம் தந்த ஊக்கத்தால் புரட்சி இயக்கத்தில் தன் பங்களிப்பைத் தீவிரப்படுத்தினார் மகாவீர் சிங்.

சிறிது காலத்தில் அனைத்துப் புரட்சி வீரர்களும் கைதாகினர். பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகிய மூவரும் தூக்குமேடை ஏறினர். சந்திரச் சேகர ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாவீர் சிங் உட்படப் புரட்சி இயக்க இளைஞர்கள் பலர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.

மகாவீர் சிங், தொலைவில் உள்ள ஆந்திர மாநிலப் பெல்லாரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு அடைக்கப்பட்ட புரட்சியாளர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாகினர். மகாவீர் சிங்கை நாள்தோறும் முகத்திலேயே அடிப்பது, அங்கிருந்த சிறையதிகாரி ஒருவரின் வழக்கம். இவ்வாறு ஒருநாள், இருநாள் அல்ல, ஒன்றரை ஆண்டுக்காலம் மகாவீர் சிங் தாக்கப்பட்டார்.

ஒருநாள் பொறுமையிழந்த மகாவீர் சிங் அந்த அதிகாரியைத் திருப்பித் தாக்கி நையப் புடைத்துவிட்டார். அதை எதிர்பார்க்காத அதிகார வர்க்கம் அதிர்ந்துபோனது. திருப்பித் தாக்கிய மகாவீர் சிங்கிற்குத் தண்டனை தர முடிவெடுத்தது. மறுநாள் அதிகாரிகள், மரச்சட்டம் ஒன்றில் அவரைக் கட்டிவைத்து, முப்பது பிரம்படிகள் கொடுத்தனர். மகாவீர் சிங்கின் சதை பிய்ந்து தொங்கியது. இருப்பினும் அந்தப் புரட்சி வீரன் அச்சமின்றி, ஒவ்வொரு பிரம்படிக்கும் 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி ஓங்குக!) என்று உரக்க முழங்கினான். முழக்கத்தில் ஒலி அதிகரிக்க, அதிகரிக்கப் பிரம்படியின் வேகமும் அதிகரித்தது.

பிரம்படிக்கு அஞ்சாத மகாவீர் சிங், பெல்லாரிச் சிறையையும் புரட்சிக் கூடமாக்கிவிடுவார் என்று அஞ்சிய ஆங்கில அரசு, அவரை அங்கிருந்து அந்தமான் தீவிலிருந்த சில்வர் சிறைச்சாலைக்கு மாற்றியது.

புரட்சியாளர்கள் மற்றும் கொடும் குற்றவாளிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட நரகம்தான் அந்தமான் சில்வர் சிறைச்சாலை. இந்தியச் சிறைகளிலேயே, சிறையதிகாரிகள் அளவற்ற அக்கிரமங்கள் செய்து ஆட்டம் போட்டபோது அணுகமுடியாத அந்தமான் தீவிலிருந்த சில்வர் சிறைச் சாலையின் அதிகாரிகள் எவ்வாறு இழிவாக நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மாடுகளுக்குப் பதிலாகச் சிறைக் கைதிகள் அங்குச் செக்கிழுக்க வைக்கப்பட்டார்கள். செக்கை இரண்டு மாடுகள் இழுக்கும். சில்வர் சிறைச்சாலையிலோ செக்கை ஒரே ஒரு கைதிதான் இழுக்கவேண்டும். அதுவும் ஒரு நாளில் கட்டாயம் 30 பவுண்டு எண்ணெய் ஆட்டி எடுத்தாகவேண்டும். ஓயாமல் இழுத்தாலும்கூட ஒரு பயில்வானால்கூட 30 பவுண்டு எண்ணெய் எடுப்பது என்பது இயலவே இயலாது. அப்படி எடுக்க இயலாமல் போகும் கைதியை அடித்துச் செக்கின் நுகத்தடியில் தொங்கவிட்டு, வேறு இரண்டு கைதிகளை வைத்துச் செக்கை வேகமாகச் சுற்ற வைப்பார்கள். நுகத்தடியில் தொங்கும் கைதியின் உடல் தரையில் உரசி, உரசி இரத்தச் சேறாக ஆகும்.

சிறையதிகாரிகளின் அக்கிரமங்களை எதிர்க்கும் புரட்சியாளர்களின் கால்கள் நீண்ட இரும்புக் கம்பியின் இருபுறங்களிலும் உள்ள வளையத்தில் பூட்டப்படும். அந்தக் கைதி இரண்டடி அகலத்திற்குக் கால்களை அகட்டியபடிதான் இருக்க முடியும். இந்த நிலையிலேயேதான் அந்தக் கைதிக்கு உணவு, உறக்கம் எல்லாம்.

இதைவிட கொடிய தண்டனை ஒன்றுண்டு. கைதியின் இடுப்பில் ஓர் இரும்பு வளையம். இரண்டு கால்களிலும் தனித்தனி விலங்குகள். இடுப்பு வளையத்துடன் கால் விலங்குகள் கனமான கம்பியால் இணைக்கப்படும். இதனால், கைதியால் குனியவோ, நடக்கவோ, கால்களை மடக்கவோ முடியாது. இதே கோலத்தில் பல வாரங்கள், பல மாதங்கள் உயிர்வதைக்கு ஆளான கைதிகளும் உண்டு.

உணவு இதை விட மோசம். கீரைக் கட்டுகளில் சேர்ந்து வரும் பாம்புகளையும் வெட்டிப் போட்டுக் குழம்பு என்ற பெயரில் சாப்பிடத் தருவார்கள். இது போல மனித இனத்தையே தலைகுனியச் செய்யும் பல கொடுமைகள் அந்தக் கண்ணற்ற தீவில் நடந்தன.

மகாவீர் சிங்கால் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியவில்லை. சிறைக்கொடுமைகளைக் கண்டித்து அவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அதைக் கைவிடச் செய்யச் சிறையதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

அதனால் இறுதியில் அவருக்கு உணவை வலிந்து ஊட்டும் முயற்சியில் இறங்கினார்கள் சிறையதிகாரிகள். பலர் சேர்ந்து மகாவீர் சிங்கின் கை, கால்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு, இரப்பர் குழாய் மூலம் பாலை வாய் வழியாகச் செலுத்தினர். அதை உட்கொள்ள மறுத்த மகாவீர் சிங் வேண்டுமென்றே தும்மினார். தும்மும்போது பால், மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்லும். அதனால் தன் வாழ்நாள் முடியும் என்பது தெரிந்தும் அந்தப் புரட்சியாளன் பலமுறை தும்மினான். அதனால், புகட்டப்பட்ட பால் நுரையீரலில் போய்ச் சேர்ந்தது. துள்ளித் துடித்து அந்தப் புரட்சி மலர் வாடி அடங்கியது.

தனது சாவின் மூலம், தங்களை வென்றுவிட்ட அந்த மாவீரனைப் பார்த்துத் திகைத்துப்போனது சிறைத்துறை. அந்த வெறியில் அந்தப் புரட்சி வீரனின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல், மீன்களுக்கு உணவாகக் கடலில் வீசி எறிந்தார்கள்.

வாழவேண்டிய வயதில் திருமணத்தைத் துறந்து தேசவிடுதலைக்காக வெடிகுண்டு ஏந்திய அந்த வீரமகனின் உடலை, அந்தமான் கடல் தன்னுள் பெருமையுடன் ஏற்றுக்கொண்டது.

மகாவீர் சிங்கின் உடலைச் சிறையதிகாரிகள் கொண்டு சென்றபின், அவரது படுக்கையைச் சோதித்த உடனிருந்த தேசபக்தக் கைதிகள், அவர் கைப்பட எழுதிய சுருக்கமான கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அதில் மகாவீர் சிங் எழுதியிருந்த வரிகள் இவை.

'எப்படிப் பெறமுடியும், உயிரைத் தராமல் சுதந்திரம்? உவகையுடன் அர்ப்பணிக்கிறேன், உயிரை என் மண்ணுக்கு!'
கண்ணீருடன் இதைப் படித்த நண்பர்கள் மேலும் தேடியபோது மகாவீர் சிங்கின் துணிகளுக்கிடையே மற்றொரு கடிதத்தைக் கண்டனர். அது மகாவீர் சிங்கின் தந்தை தேவி சிங் மகனுக்கு எழுதிய கடிதம்.

'ஆங்கில அரசாங்கம் நாடு முழுவதுமிலிருந்து ஒளிவீசும் மின்னும் வைரங்களைத் தேர்ந்தெடுத்து அந்தமான் தீவில் சேர்த்திருக்கிறது. அந்த வைரங்களுக்கு இடையில் இருக்கும் நல்வாய்ப்பு உனக்குக் கிடைத்ததை அறிந்து மனம் மகிழ்ச்சி கொள்கிறது மகனே! அங்கிருந்து நீ மேலும் ஒளிவிடவும், என் பெயரையும், நாட்டின் பெயரையும் காக்கவும் என் நல்லாசிகள்' தேவி சிங் எழுதிய நெஞ்சை உருக்கும் வரிகள் இவை.

நம்புங்கள்! இப்படி ஒரு தந்தையும், இப்படி ஒரு மகனும் இருந்தார்கள்!
இப்படிப்பட்ட தியாகச் சீலர்கள் பிறந்து தங்கள் இன்னுயிர்களைப் பலி கொடுத்துப் பெற்றதுதான் இந்திய விடுதலை.
அப்படி விடுதலை பெற்ற இந்திய நாட்டில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறோம்! யோசிப்போம்!

Sunday 1 January 2017

மாயவனத்தின் வசீகரன்

பரமக்குடி பா. உஷாராணி


ஒளிப்படம்: தேனி ஈஸ்வர் | நன்றி: தளவாய் சுந்தரம்
டிசம்பர் 22ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் நண்பர் ரிஷபன் திருவரங்கத்திலிருந்து அலைபேசியில் பேசினார்.

“நம்ம வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாடமி விருது” அவர் சொல்லி முடிப்பதற்குள் “ஹை அப்படியா! அப்படியா!” என நான் வானுக்கும், பூமிக்கும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டேன். பரவசம் என் இரு சிறகுகளாகிப் போனது. மகிழ்ச்சி வெள்ளத்தில் என் நதி நுரைத்துப் பொங்கிப் பெருக்கெடுத்தோடியது. இருக்காதா பின்னே!

‘படைப்புக் கடவுள்’ என அவரைக் கொண்டாடும் திருக்கூட்ட மரபு எங்களுடையது. வண்ணதாசனைப் பிடிக்கும் எனச் சொல்பவர்கள், அடுத்த நொடியே எங்கள் ஆத்மார்த்தமான தோழமைகளாகிவிடுகிற வரம் பெற்றவர்கள் நாங்கள். அவர் வாழும் காலத்தில், நாமும் வாழ்கிறோம் எனப் பெருமிதப்படுகிறவர்கள்.

தொலைக்காட்சியே பார்க்காத நான், அன்று முழுக்கத் தொலைக்காட்சியை ஓடவிட்டேன். மிக அருமையாகப் பேட்டி தந்துகொண்டிருந்தார். தொலைக்காட்சி நிருபரின் ஒரு கேள்விக்கு “படைப்பாளியான என்னைவிட கலைஞன் என்ற முறையில் வண்ணநிலவனுக்கு இந்த விருது சேர்ந்திருக்கலாம்” என்றார். என்ன சொல்ல! இதை இதைத்தான் எழுத்துக்களாக விதைக்கிறார் அவர். பிரியத்தின் திரைச்சீலையில், நேசத்தூரிகையால் அன்பின் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருப்பவர் அல்லவா அவர்.

சி. கல்யாணசுந்தரம் என்கிற இயற்பெயரைக் கொண்டவர். ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதை களும், ‘வண்ணதாசன்’ என்கிற பெயரில் கதைகளுமாய் 1962இலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். கதைகளாகட்டும், கவிதைகளாகட்டும், கடிதங்களாகட்டும் அவரது எழுத்துக்கள் தனித்த வண்ணமும், அடர்த்தியும் நிரம்பியவை. எல்லோரிடமும் அன்பாயிருக்கத் தூண்டுபவை. எதிர்ப்படும் எவரையும் சினேகிக்க உந்தித் தள்ளுபவை. மனசை மிருதுபடுத்துகிற, இதப்படுத்துகிற இழைகளால், அளப்பரிய அன்பின் பிரபஞ்சத்தை நெய்பவை.

‘மனிதனே, இந்த உலகை நீ, கடவுளின் கண்களால் பார்’ என்பாரே கலீல் ஜிப்ரான். அதைப் போன்றே வண்ணதாசனும் கடவுளின் கண்களால் இவ்வுலகை, இம்மனிதர்களைக் காணும் அற்புதர்.

மானுட அன்பின் வற்றாத, நெகிழ்ச்சியூட்டும் ஈரங்களைத் தன் தனித்துவமிக்க எழுத்தாற்றலால் பரிமளிக்கச் செய்கிறவர். வனப்பு மிளிரும் அவரது நுண்மையான மொழிநடைக்கு உதாரணங்கள் முன்னும் இல்லை; பின்னும் இல்லை.

க்ரைம் நாவல்கள் தொடங்கிப் பாலகுமாரன் வரை பள்ளி புத்தகப் பைக்குள் மறைத்து எடுத்துச் சென்று, வாசிக்கும் அளவிற்குப் புத்தகப் பைத்தியமான நான், வண்ணதாசனில் வந்து நிலைத்தது. வண்ணதாசனின் ‘எல்லோருக்கும் அன்புடன்’ கடிதத் தொகுப்பு நூலை எனக்குத் தபாலில் அனுப்பியிருந்தார். என் உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அதன்பின் கதை, கவிதை என அவரது தொகுப்புகளை வாசிக்க, வாசிக்க என் பூமி புதுசாய் மாறிப்போனது. ‘வண்ணதாசன் கதைகள்’ நூலே எனக்கான பகவத் கீதையானது.

அவரது பெருவனத்திற்குள் அன்று நுழைந்தவள், இன்று வரை மீளவேயில்லை. நான் மட்டுமல்ல, அவரது வாசகர்கள் ஒவ்வொருவருமே அப்படியானவர்கள்தான்! அவ்வாறானதொரு மாயவனத்தின் வசீகரன் அவர்.

‘சமவெளி, கலைக்க முடியாத ஒப்பனைகள், மணல் உள்ள ஆறு, கிருஷ்ணன் வைத்த வீடு, சின்னு முதல் சின்னு வரை, இன்னொரு கேலிச்சித்திரம், பூனை எழுதிய அறை, மீனைப் போலவே இருக்கிற மீன், நாபிக்கமலம், இப்போது விருது பெற்றிருக்கும் ‘ஒரு சிறு இசை’ வரைக்கும், எத்தனை எத்தனை தொகுப்புகள்!

ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கும்போதெல்லாம், பரபரப்புடன் எதிர்பார்த்து, ஏமாற்றத்துடன் கடந்து செல்வேன்.

1954இல் பிரதமர் நேரு தொடங்கி வைத்த அமைப்புதான் சாகித்திய அகாடமி. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்து, ஒவ்வொரு மொழிக்கும், ஒரு எழுத்தாளர் என விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருதாக ஒரு லட்சத்திற்கான காசோலை, சால்வை, செப்புப்பட்டயம் வழங்கப்படும். தமிழ்மொழிக்கான பிரிவில் ஆரம்பத்திலிருந்தே எழுத்தாளர் தேர்வு என்பது கடும் விமர்ச்சனங்களுக்கு உள்ளாகி விடும்.

‘உலகில் நல்லறங்களும், நல்லிசையும், நல்லியல்புகளும், நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது, ஒரு திருவிழா போல் நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர். ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கைகளிலும் சந்தனம். எல்லோர் சிகையிலும் ரோஜா இதழ்.’

தன் தந்தை தி.க.சிக்கு நிகழ்ச்சிக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகள் இவை. இதோ இப்போது அவரைக் கொண்டாடும் எங்கள் எல்லோர் முகங்களிலும் சுடர். ஒவ்வொருவர் கையிலும் சந்தனம். ஒவ்வொருவர் சிகையிலும் ரோஜா இதழ்.

ஆம்! இது திருவிழாக்காலம். வாழ்க நீ எம்மான் எந்தையே!