Wednesday, 15 April 2015

"உலகின் உன்னதங்கள் பெண்களே!"

கிழக்கு வாசல் உதயம் மார்ச் 2015 இதழில் வெளிவந்த கவிஞர் ஈழவாணியுடனான ஒரு சந்திப்பு!


"மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! அப்படியா?”

“இந்தக் கருத்தை மறுப்பதற்கேதுமில்லை. பூமியை, உலகை ஆளும் பெண் ஒவ்வொரு விடயத்தையும் தன்னகப்படுத்திக் கொள்கிறாள். குறிப்பாக படைக்கும் சத்தியை அதிகமாகக் கொண்டிருப்பதால். பாசம், பற்று என்ற வலைக்குள் இலகுவாகச் சிக்கிக்கொள்வதால் எதிர்ப்பாலினரிடம் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியும் கொள்கிறார்கள். இதைத் தமக்குச் சாதகமாக்கி இடையறாத துன்பத்தையும், இம்சைகளையும் கொடுத்து இழிவுபடுத்தி, ‘போகத்துக்கு மட்டும் பெண், வீட்டுக்குள்ளே மட்டுமே பெண்’, இவ்வாறான கருத்துக்களைத் திணிக்கிறார்கள்.

ஒரு உயிரைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்மை, அதைச் சுமந்து வலிகள், துன்பங்களைத் தாங்கி, உலகில் இன்னொரு தனியாளாக வாழ்வதற்கு வழிகளையும் தேவைகளையும் நிறைவுற அமைத்துக்கொடுக்கிறாளே பெண்! இத்தனை சக்தியைக் கொண்ட மங்கையாய்ப் பிறப்பதற்கு பாவம் செய்துவிட்டால் எப்படி முடியும்?

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். விமானம் ஓட்டுவதிலிருந்து வீட்டில் புதிது புதிதானவற்றைக் கண்டுபிடித்து, மனித வாழ்க்கையின் மகா உன்னத மகிழ்ச்சியை உணர்த்தி மகிழ்வதற்காக. ஏன் கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் ஓடஓட விரட்டியடித்து ஒதுக்க முயலும் கூட்டத்துக்குள்ளும் எதிர்த்து நின்று வாழ்ந்து சாதிக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஈழப்போராட்டத்திலே தாய்மண்ணைக் காக்க தமது எதிர்காலத்தையும், உயிரையும் துச்சமாய் மதித்துப் போராடி சாதனையோடு வீரச்சாவடைந்த மங்கையரெல்லாம் உலக வரலாற்றின் உன்னதங்களாகவே போற்றப்படுவர்.”

“உங்களுக்குப் பிடித்த உங்கள் கவிதை எது? ஏன்?"

அப்பா 
'என்னைக் காட்டிய
வண்ணக் கண்ணாடி
என்னை நானுணர்ந்து
விம்பம் பார்க்கையில்
நழுவி உடைந்துபோனது
ஓருருவமான மாயையில்
மறைந்திருந்த என்னை
ஆயிரம் சக்திகளாய்; உணர்த்தியவர்
உடைந்த சில்லங்களில்
என் விம்பங்கள்'

அரச மரங்களே
'வன்னியின் வளமிகு காடுகளே
உமக்கோர் அறிவிப்பு 
தரமிகு உம் குடும்பத்தில்
எழில்மிகு அரச மரங்களுண்டோ
யாழின் சுண்ணாம்புச் சுவையூறிச்
செழித்த மரங்களே
உண்டோ உம்மிடமும்
உண்டெனில் 
அவசர அறிக்கையில்
கொலைத்தீர்ப்பிடுங்கள் ஏனெனில்
உம்மண்ணை ஆக்கிரமிக்க
அரசமரநிழல் பாத்தலைகிறான் புத்தன்.'

கவிதை எழுதும் தருணங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவையும் வித்தியாசமானவையும்கூட. எல்லா நேரங்களிலும் எழுதுவதில்லை. எழுதத் தோன்றும் அந்தத் தருணத்தில் அவற்றை எழுதவில்லை என்றால் எனக்கு மறந்து போய்விடும். ஆனால், எல்லாச் சந்தர்ப்பத்திலும் தோன்றுவதை எழுதிவிட முடிவதில்லை.

கவிதைகளைப் பெரும்பாலும் ரசித்து அனுபவித்தே எழுதியிருப்பேன். அதனால், அவற்றை ரசனையோடு நானே திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பதுமுண்டு. எல்லாமே என் குழந்தைகளே!

ஆனாலும், இங்கு மேலே கூறிய கவிதைகள் வித்தியாசமானவை. அப்பாவைப் பற்றிய கவிதை ஒன்று. சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட்டார். என்னை ஒரு மனுசியாய், மகளாய், பெண்ணாய், சமூகத்தில் ஒரு பிரஜையாய் அறியப்படும்போது அவர் நிஜமான உருவத்தில் என்னோடு இருக்கவில்லை. ஆனால், மாய உலகில் என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்.

அரசமரங்கள் பற்றிய அடுத்த கவிதை இலங்கையில் முக்கியமான இடங்களில் நிற்கும் அரசமரங்களில் புத்தர் குடிபூர விகாரைகள் உருவாகிவிடும். 2009 ஈழப்போர் நிறைவடைந்த பின்னர் அரசமரம் நிற்கிற தமிழர் பகுதிகளில் எல்லாம் புத்தரைக் கொணர்ந்து உட்காரவைத்து தம் விகாரைகளை அமைத்துக்கொள்கிறார்கள் சிங்களர். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இயலாமையின் வெளிப்பாடாய் வந்த அக்கவிதையும் எப்போதும் மனதில் நின்று கொண்டேயிருக்கிறது.”

“நீங்கள் ஒரு கவிஞர். உங்களுக்கு மற்ற யாருடைய கவிதைகள் பிடிக்கும்?”

“கவிதைகளை எனக்கு இன்னாருடையது என்பதற்காகப் பிடிப்பதில்லை. படித்தவுடன் சில கவிதைகள் பட்டென மனதில் ஒட்டிக்கொள்கிறது. கவிதையின் கருத்து, நயம், சந்தம், சூழ்நிலைகள் என்பன இவற்றில் செல்வாக்கு செலுத்துவதாக நான் நினைக்கிறேன். சில கவிதைகளில் கருத்திருக்காது. அந்த நேரத்து மனநிலையில் அது ஒட்டிக்கொள்ளும். சில சமயங்களில் கவிதைகள் மாய உலகில் சில நிமிட சஞ்சாரிப்பிற்கான திறவுகோல்களாகக் கூட இருக்கிறது.

ஆழியாளுடைய கவிதைகள், புதுவை ரத்னதுரையுடைய கவிதைகள், கவிஞர் காசி ஆனந்தனுடைய கவிதைகள், அம்புலியுடைய கவிதைகள், தா. பாலகணேசனுடைய கவிதைகள், சிவரமணியுடையவை, பஹிமாஜகானுடைய கவிதைகள் என நிறையப் பிடிக்கும். நான் கூறிய இவர்கள் எல்லாம் ஈழத்துக் கவிஞர்கள். 

தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பல பேருடையவை எனக்குப் பிடிக்கும். அவற்றைத் தனித்தனியே சொல்லிப் இங்கு இடம் போதாது.

அண்மையில் எனக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் படித்தேன். அது தீபச்செல்வனுடையதே!

‘இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்
வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்
இந்த வானொலி வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது
கைகளுக்குள்ளிலிருந்து எப்படி நழுவி விழுந்தீர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.
இப்படியாக அந்தக் கவிதை தொடர்கிறது.’ ”

“பதிப்புலக முன்னோடி எஸ்.பொவின் ‘மித்ர பதிப்பகம்’ உங்கள் பொறுப்பில் உள்ளது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? எஸ்.பொ. என்கிற எஸ். பொன்னுதுரை உங்கள் பார்வையில் எப்படி?"

“எஸ்.பொ ஈழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமில்லாது உலகளாவிய தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் மிகத் தொன்மையான எழுத்தாளுமையாவார். தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளை ஆழமாக அறிந்து புலமையோடு நவீன இலக்கியத்தைப் படைத்தவர். அதுமட்டுமின்றி ஆங்கிலப் புலமை கொண்டவர். இதனால் சர்வதேச இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் பயிற்சியும் தேர்ச்சியுமுடையவர். இதனாலேயே சர்வதேச மட்டத்திலான இலக்கியங்களைப் படைக்கும் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ முடிந்திருக்கிறது. பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்திருக்கிறார். மேலும், சிறுகதைகள், தன் வரலாற்று நூல், அரசியல் - பண்பாட்டுக் கட்டுரைகள் தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் விமர்சன நூல்கள், நாடகங்கள், உரைச் சித்திரங்கள் கவிதைகள் என எல்லாத் துறையிலும் விளங்கியவர்.


இவருடைய நூல்கள் பலதரப்பட்டவை. மனிதனை ஆட்டிப் படைக்கும் காமத்தையும், யாழ்ப்பாணத்து வாழ்க்கையினையும், மனித உணர்வுகளின் அடியாழத்தையும் மிக இயல்பாகவும், உண்மையாகவும் அணுகியிருக்கிறது சடங்கு என்ற நாவல். தொடர்ச்சியாக நனைவிடை தோய்தல், பூ, கீதையின் நிழலில், இனி, ஈடு, கேள்விக்குறி, அப்பாவும் மகனும், உறவுகள், தேடல், முறுவல், மத்தாப்பூ, சதுரங்கம், வலைமுள், தீதும் நன்றும், மணிமகுடம் போன்ற பல நாவல்களோடு எஸ்.பொ கதைகள் தொகுக்கப்பட்டும் வந்திருக்கிறது. யாரும் சொல்லத் துணியாத, வெளிவராத பல அரசியல் நாடகங்களை, அந்தரங்கத் தொடர்புகளைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். எஸ்.பொ.வின் படைப்புகள் பல. ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு கோலங்கள்.

மித்ரவும் எஸ்.பொவுடைய நூல் பணிகளும் மிக ஆழமானதாகவும், ஈழத்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டிலிருந்து நானே மித்ரவை நடத்திக்கொண்டிருக்கிறேன். அவருடைய வயோதிமையும், தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாமையும்  மித்ரவை யாராவது ஒருவரிடம் ஒப்படைப்பதற்குப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. நான் ஆவணப்படம் எடுப்பதற்காக அக்காலப் பகுதியில் எஸ்.பொ.வை வந்து சந்தித்துப் பேசுவேன். ‘பூவரசி’ காலாண்டிதழ், நூல்கள் என நான் பதிப்புத் துறையிலும் இருந்ததால், என்னுடைய செயற் பாடுகளில் நம்பிக்கையுற்றிருந்ததாலும் தன்னுடைய எழுத்து வாரிசாக என்னை அறிவித்திருந்தார். மித்ரவையும் தொடர்ந்து நடத்தும் தகுதியும், திறமையும் எனக்கு இருப்பதாகக் கருதி என்னிடம் அதை ஒப்படைத்துவிட்டார்.”

“இன்றைய சூழலில் புலம்பெயர்ந்த வாழ்க்கை அதாவது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று செல்வது மிகவும் இயல்பாக உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“ஆம்! நான்கூட புலம்பெயர்ந்த ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 2004ஆம் ஆண்டின் கடைசிப் பகுதிகளில் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தோம். மலேசியா, சிங்கப்பூர், துபாய் என இப்போது சென்னை பழகிக் கொண்டுவிட்டது. என்ன இருந்தாலும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதைப்போன்ற சுகமும், சொர்க்கமும் சொல்லில் அடங்காதவை.

இன்று ஈழத்தின் தமிழரில் பாதிப்பேர் புலம்பெயர்ந்து நாடு நாடாகத்தான் அலைகிறார்கள். இதில் சிலபேர் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற இசைவுகளுடன் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஆனால், மீதிப்பேர் வாழ்வுரிமையற்று தகுதிக்கேற்ற தொழில்களைப் பெற முடியாமல் வீடுகள் அற்று அல்லலுறும் நிலை அவலமே."

“இதழியல் படித்த நீங்கள் ‘பூவரசி’ என்ற இதழை நடத்துகிறீர்கள் சரி? ஆனால் திரைப்படம் தயாரித்து இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது? அந்தப் பணி எந்தளவில் உள்ளது?”

“உண்மைதான்! சின்ன வயதிலிருந்தே இதுதான் செய்ய வேண்டும் என்றில்லாமல் கலையோடு மிகுந்த ஆர்வமும், சேர்ந்து இயங்குவதும் உண்டு. சில வீதி நாடகங்களைக் கூட தயாரித்திருக்கிறேன், விழிப்புணர்வு சார்ந்து.

எனக்கு இயல்பாகவே நாடகங்களைத் தயாரித்து நண்பர்களைச் சேர்த்து இயக்குவது, இசை நாடகங்களை அமைப்பது என இருந்தாலும், இந்த இடத்தில் என்னுடைய பாடசாலைத் தோழி சாறாவை நினைவு கூருகிறேன். அவள் என்னைக் களவுகளவாக படம் பார்க்க அழைப்பது மட்டுமின்றி அவளுடைய அப்பா அனுப்பி வைத்த விலையுயர்ந்த கமறாவை என்னிடம் கொடுப்பாள். நாங்கள் காடுமேடு, குளம், குட்டைகள் எனச் சுற்றியடிப்பதும், விதம் விதமாகப் பதிவு செய்வதும் என விளையாட்டாகவும், இனிமையாகவும் வகுப்புகளை கட் அடித்துச் சுற்றிய அந்த நாட்களை மறக்க முடியாது. 

என்னுடைய கலை இலக்கிய ஆர்வம் புத்தகம் எழுதுவது, பத்திரிகை எனவே சென்றுகொண்டிருந்தது. என்னுடைய அண்ணா 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தார். ஜீவா நடித்த தெனாவட்டு, மனதோடு மழைக்காலம், புலி வருது போன்றவை அவர் தயாரித்த படங்களே! அப்போது என்னை அவர் சென்னைக்கு வந்து, இந்த தயாரிப்பு நிர்வாகத்தோடு திரைப்படப் பாடல்கள் எழுதப் பழகிக்கொள் என அழைத்தார். ஆனால் நான் அப்போது மறுத்துவிட்டேன். பின் 2007இல் சென்னைக்கு வந்திருந்தாலும் 2009 வரை எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.

சினிமா சார்ந்தவர்களை தொழில் சார்ந்து சந்திப்பதுண்டு. இதற்குப்பின் சில படங்களில் ஈழத்தமிழ் பேச சொல்லிக் கொடுப்பதற்கு அழைத்தார்கள். இயல்பான ஆர்வங்களும் தொடர்ந்து பாலுமகேந்திராவின் பயிற்சிப்பட்டறையும் என என்னையும் சினிமாவிற்குள் இழுத்துவிட்டது. முதலில் குறும்படம், ஆவணப்படங்கள் என்றுதான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

இப்போது ஈழம் சார்ந்த முழுநீளத் திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு செய்ய திட்டம். ஈழத்தின் திரைக்கலைஞர்கள், இந்திய திரைக்கலைஞர்கள் என்ற கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஈழத்தைச் சேர்ந்த நடிகர் அபயன் இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனாகவும் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது”

தொடர்புக்கு: 9600131346 | eezhavani@gmail.com 

1 comment: