Wednesday 10 December 2014

துன்பமே ஆற்றலைத் தரும்

ஒரு நாள் காலை நேரம். ஓர் அவசர அலுவல் காரணமாக என் நெருங்கிய நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். வியாபாரத்தில் கொடிக் கட்டிப் பறக்கும் இளைஞர் அவர். என்னைப் பார்த்ததும் கடைவாசலுக்கு வந்து விட்டார். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், அலுவலகம் செல்வோரும் என்று கடைத்தெரு பரபரப்பாக இருந்தது. நண்பரிடம் செய்தி சொல்லப் போகும் தருணத்தில் கூட்ட நெரிசலில் முழி பிதுங்கியபடி நகரப்பேருந்து ஒன்று நகர்ந்தபடி எங்களைக் கடக்க முயன்றது.

பேருந்துக்குள் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் நண்பரைப் பார்த்து,
“சார்! நல்லா இருக்கிங்களா?” என்று கையசைத்தான்.

அவனைப் பார்த்ததும் முகம் மலர “அடடே நீயா! நல்லா இருக்கியா? பத்திரமா போயிட்டு வா!” என்று பதிலுக்குக் கையாட்டினார்.

அதுமட்டுமல்ல, பேருந்து கொஞ்சம் தூரம் போகும் வரை அந்தப் பக்கமே பார்த்திருந்துவிட்டு அப்புறம்தான், “ஹும், சொல்லுங்க!” என்றார் என்னைப் பார்த்து.

அவர் மனஓட்டத்தைக் கொஞ்சம் புரிந்துகொண்டு “யார் அந்தப் பையன்?” என்றேன்.

“வருங்காலத்தில் மிகப்பெரிய ஆளா வரப்போகிற அசகாயச் சூரன் சார் அவன்!” நண்பரின் அந்த அசத்தலான பதிலைக் கேட்டு நானும் கொஞ்சம் மிரண்டு போனேன்.

“என்னங்க இப்படிச் சொல்றீங்க?”

“ஆமா சார்! ஒரு நாள் கடைக்குள் நுழைந்த இவன் நேரே எங்கிட்டே வந்தான். ‘சார்! ஒரு பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். உங்க கடை வாசலியே நின்னு வித்துட்டுப் பணத்தைக் கொடுத்திடறேன்!’ அப்படீன்னான். அது கடுமையான பனிக்காலம்! ‘ஓ! அல்வாவுக்கே அல்வாவா! அதிருக்கட்டும்! படிக்கிற பையன்தானே, நீ!’ என்றேன். ‘ஆமா சார்! ஏழாவது படிக்கிறேன் சார். வீட்ல அப்பா, அம்மா, தங்கச்சி, நாலு பேரு. ஆத்தங்கரையிலே குடியிருக்கோம். அம்மா வீட்டு வேலைக்குப் போகும். தங்கச்சி ரெண்டாங் கிளாஸ் படிக்குது’ என்றான். ‘அப்பா?’ என்றதும், ‘குடிச்சிட்டு வந்து அம்மாகிட்ட சண்டை போடறதும், அலங்கோலமா போதையில படுத்துத் தூங்குறதுந்தான் அப்பாவோட வேலை. அம்மா ரொம்பக் கஷ்டப்படுது சார்! அதுக்கு ஏதாவது உதவியா இருக்கணும் சார். பத்து ‘காது கப்பு’ கொடுங்க சார். பணம் இல்லே சார். வித்துட்டுக் உடனே கொடுத்திடறேன் சார்’ அப்படீன்னான்!”

“அட! இந்தச் சின்ன வயசுல எப்படி ஒரு யோசனை பாருங்க!”

“உடனே அவன்கிட்டே பத்து காது கப்புக் கொடுக்கச் சொன்னேன். நாங்க விக்கிறது, ஒண்ணு அஞ்சு ரூபா. அதையே எங்கக் கடை வாசல்லேயே நின்னு பத்து ரூபா, பத்து ரூபான்னு கூவி, பத்தையும் ஒரு மணி நேரத்திலே வித்துட்டு, ‘இந்தாங்க சார்! உங்க அம்பது ரூபா பணம்’னு கொடுத்தான். அசந்து போயிட்டேன்! ‘எங்க அடக்க விலையிலே கொஞ்சம் லாபம் வச்சுக்கிட்டேன். ஒண்ணு நாலு ரூபாதான் ஆகுது. இந்தா மீதம் பத்து ரூபா’ன்னு நாப்பது ரூபாய் மட்டும் வாங்கிக்கிட்டேன். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கல. அப்பைக்கப்போ வருவான். எதிர்காலத்திலே இவன் பெரிய ஆளா வரப்போறான்!”
நண்பர் மனம் நெகிழ்ந்து சொன்னதைக்கேட்டு எனக்குத் தோன்றியது இதுதான்!

‘அளவற்ற துன்பம், அளப்பரிய ஆற்றலைப் பரிசாகத் தரும் போலும்!’

- உத்தமசோழன்
ஜூன் 2014 'என் வாசலின் வழியே' பகுதியில் வெளிவந்தது

No comments:

Post a Comment